Press "Enter" to skip to content

காவேரிப்பட்டணம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்திற்காக மாணவர்களை சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்

* நடுவழியில் வாகனம் பறிமுதல்
* நடந்தே பள்ளிக்கு சென்ற பரிதாபம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் கிராம, நகர்ப்புற அரசு பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், கிராமப்புற ஒன்றியங்களில் இருந்து ஒரு நடுநிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுத்து அப்பள்ளியை நகர்ப்புற உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளியுடன் இணைப்பு செய்து 2 பள்ளிகளிலும் மாணவர்களைக் கொண்டு கலந்துரையாடல் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், காவேரிப்பட்டணம் நரிமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 38 மாணவ, மாணவிகளை நேற்று பெண்ணேஸ்வரமடம் நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றனர். பின்னர், மீண்டும் நரிமேடு பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சரக்கு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கிருஷ்ணகிரி-தர்மபுரி சர்வீஸ் சாலையில் சரக்கு வாகனத்தில் மாணவ, மாணவிகள் சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவேரிப்பட்டணம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹரிராம், வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினார். அவரிடம் ஆசிரியர்கள் விவரம் தெரிவித்தனர். போதிய பாதுகாப்பு இல்லாமல், சரக்கு வாகனத்தில் மாணவர்களை அழைத்துச் சென்றது குறித்து டாக்டர் கேட்டதற்கு உரிய பதில் அளிக்காமல் ஆசிரியர்கள் திணறினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பட்டணம் போலீசார், சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால், அங்கிருந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு நடந்தே சென்றனர். இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தி, உரிய பாதுகாப்பு இல்லாமல் மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »