Press "Enter" to skip to content

டிஎன்பிஎஸ்சி முறைகேடு… மேலிட ஆதரவில்லாமல் இதை செய்ய முடியுமா..? சந்தேகம் கிளப்பும் அழகிரி!

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை மேலிடத்தின் ஆதரவில்லாமல் இடைத்தரகர்களால் நிச்சயம் செய்திருக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழக அரசின் நிர்வாகம் எத்தகைய சீர்கேடான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து வெளிவருகிற செய்திகளும் நடவடிக்கைகளுமே தகுந்த சான்று. குரூப் தேர்வில் சரியான விடைகளை தேர்ந்தெடுத்தால் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களின் வேலை உறுதி செய்யப்படும். எனவே, குரூப் – 1, குரூப் – 2 தேர்வுகளில் வெற்றி பெறாதவர்கள் கடைசி வாய்ப்பாக இந்தத் தேர்வுகளை கருதி, தீவிரமான முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


விசாரணைகள் முடியாதிருக்கும் நிலையில் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வுகளில் வேறு எந்த மையத்திலும் முறைகேடு நடக்கவில்லை என்று அவசர அவசரமாகக் கூறியது பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப்-2 தேர்வின் போது வினாத்தாள்கள் வெளிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே டி.என்.பி.எஸ்.சி தன்னுடைய நடவடிக்கைகளை கடுமையாக்கி இருந்தால் இன்றைக்கு ஏற்பட்ட முறைகேடுகளை தவிர்த்திருக்க முடியும்.


ஏதோ ஒரு வகையில் டி.என்.பி.எஸ்.சி தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் முறைகேடுகளை நடத்துவதற்கு வாய்ப்பை வழங்குகிற வகையில் ஏற்பாடுகள் நடந்திருப்பதாக நம்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இத்தகைய முறைகேடுகளை மேலிடத்தின் ஆதரவில்லாமல் இடைத்தரகர்களால் நிச்சயம் செய்யமுடியாது. இது 16 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணையில் இடைத்தரகர்கள் மற்றும் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் உதவியுடன் அழியும் மையால் தேர்வு எழுதி, பிறகு வேறு ஒரு மை மூலம் அதையே திருத்தி எழுதும் வகையில் இந்த முறைகேடு நடந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.


டி.என்.பி.எஸ்.சி மீது படிந்திருக்கிற அழியாத கறையை துடைக்க வேண்டுமானால், தமிழக ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி விசாரணையினால் உண்மைகள் வெளிவராது. டி.என்.பி.எஸ்.சி-யைக் காப்பாற்றுகிற முயற்சியில்தான் தமிழக ஆட்சியாளர்கள் மறைமுகமாக செயல்படுவார்கள். எனவே, தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் வேலைவாய்ப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் வெளிவந்திருக்கின்றன. இந்த முறைகேடுகள் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்ததைப் போன்ற ‘தமிழகத்தின் வியாபம்” என்று கருத வேண்டியிருக்கிறது.
எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த அனைத்து முறைகேடுகள் குறித்தும் பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை மத்திய புலனாய்வுத்துறை மூலம் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிற வாய்ப்பு ஏற்படும்” என்று கே.எஸ். அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »