Press "Enter" to skip to content

வெற்றி மகிழ்ச்சியில் ஒரு குழந்தையை மாதிரி துள்ளிவந்து ரோஹித்தை கட்டிப்பிடித்த கேப்டன் கோலி.. காணொளி

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டி நேற்று ஹாமில்டனில் நடந்தது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணியும் மோதின. 

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 40 பந்தில் 65 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் 9 ஓவரில் இந்திய அணி 90 ரன்களை குவித்திருந்தது. ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரோஹித் சர்மா 65 ரன்களில் அவுட்டாக, அதன்பின்னர் இந்திய அணியின் ரன்ரேட் வெகுவாக குறைந்தது. கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டெத் ஓவர்களில் ஆடாமல் அதற்கு முன்பே அவுட்டாகிவிட்டதால், இந்திய அணி 179 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். கப்டில், முன்ரோ, சாண்ட்னெர் ஆகியோர் ஆட்டமிழந்த பின்னர் வில்லியம்சனுடன் காலின் டி கிராண்ட் ஹோம் ஜோடி சேர்ந்து ஆடினார். டி கிராண்ட் ஹோம் மந்தமாக ஆட, வில்லியம்சன் மறுமுனையில் இந்திய பவுலிங்கை வெளுத்து வாங்கினார். டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவரான பும்ராவின் பவுலிங்கை டார்கெட் செய்து பொளந்துகட்டினார். அரைசதம் அடித்த வில்லியம்சன், அவரது சதத்தை நோக்கியும் அணியின் வெற்றியை நோக்கியும் அபாரமாக ஆடினார். 

பும்ராவின் 17வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியும் 19வது ஓவரில் ஒரு பவுண்டரியும் விளாசினார் வில்லியம்சன். 19வது ஓவரில் டெய்லரும் ஒரு பவுண்டரியடித்தார். கடைசி 2 ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் பும்ரா 11 ரன்களை வழங்கினார். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஷமி வீசினார். ஷமி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார் டெய்லர். அதற்கடுத்த பந்தில் சிங்கிள் எடுக்க, மூன்றாவது பந்தில் வில்லியம்சனை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஷமி. வில்லியம்சன் 48 பந்தில் 95 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். நான்காவது பந்தில் டிம் சேஃபெர்ட்டை ஷமி ரன் எடுக்கவிடவில்லை. கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஐந்தாவது பந்தையும் சேஃபெர்ட் அடிக்கவில்லை. ஆனால் அதற்கு ஒரு ரன் ஓடி எடுத்தனர். போட்டி டை ஆனதையடுத்து கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், டெய்லரை போல்டாக்கினார் ஷமி. இதையடுத்து போட்டி டையில் முடிந்தது. 

போட்டி டையில் முடிந்ததை அடுத்து, போட்டியின் முடிவை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. நல்ல ஃபார்மில் அருமையாக வீசிய ஷமியிடம் சூப்பர் ஓவரை கொடுக்காமல், இன்று படுமோசமாக வீசிய பும்ராவிடம் சூப்பர் ஓவரை கொடுத்தனர். போட்டியில் அவரது பவுலிங்கை அடித்து நொறுக்கியதை போலவே சூப்பர் ஓவரிலும் கப்டிலும் வில்லியம்சனும் இணைந்து அடித்து துவம்சம் செய்தனர். 

சூப்பர் ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன் சிங்கிள் அடிக்க, இரண்டாவது பந்தில் கப்டில் சிங்கிள் அடித்தார். மூன்றாவது பந்தை சிக்ஸர் விளாசிய வில்லியம்சன், நான்காவது பந்தில் பவுண்டரியும் ஐந்தாவது பந்தில் சிங்கிளும் அடித்தார். கடைசி பந்தில் கப்டில் பவுண்டரி அடிக்க, நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் 17 ரன்களை விளாசியது.

சூப்பர் ஓவரில் 18 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ரோஹித்தும் ராகுலும் இறங்கினர். டிம் சௌதி அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த ரோஹித், இரண்டாவது பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ராகுல், அந்த பந்தில் பவுண்டரி அடித்துவிட்டு, நான்காவது பந்தில் சிங்கிள் எடுத்தார். கடைசி 2 பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி 2 பந்திலும் 2 சிக்ஸர்களை விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் ரோஹித் சர்மா.

இதையடுத்து இந்திய அணி முதன்முறையாக நியூசிலாந்தில் டி20 தொடரை வென்றது. கிட்டத்தட்ட தோல்விக்கு அருகில் சென்றுவிட்டு, எதிர்பாராதவிதமாக, கடைசி நேரத்தில் கிடைத்த இந்த வெற்றி கேப்டன் விராட் கோலிக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரோஹித் சர்மா கடைசி 2 பந்திலும் 2 சிக்ஸர் விளாசியதை அடுத்து, விராட் கோலி மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ஓடிவந்து ரோஹித்தை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கோலியுடன் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட மற்ற வீரர்களும் மைதானத்திற்குள் ஓடிவந்து ரோஹித்தை கொண்டாடி தீர்த்தனர். விராட் கோலி சாதாரண வெற்றியையே கொண்டாடி தீர்த்துவிடுவார். இந்த த்ரில் வெற்றியை சொல்லவா வேண்டும்..?
 

The content we deserve that BCCI doesn’t show. Rohit – Virat 💓🇮🇳🏏 #NZvIND #NZvsIND #RohitSharma #ViratKohli pic.twitter.com/ebytmtbuN8

— 𝐌𝐀𝐇𝐈𝐑𝐀𝐓 🤹 (@GOATKingKohli) January 29, 2020

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »