Press "Enter" to skip to content

முதலீடு திட்டங்களில் அரங்கேறும் மோசடிகள்: கிராமப்புற அஞ்சலகங்களில் பணம் போட மக்கள் தயக்கம்..கூடுதல் இலக்கு நிர்ணயிப்பதால் தபால் ஊழியர்கள் திண்டாட்டம்

நெல்லை: நெல்லை தபால் கோட்டத்தில் கூடுதல் இலக்கு நிர்ணயிப்பதால் அஞ்சல் ஊழியர்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். அஞ்சல் முதலீடு திட்டங்களில் ஆங்காங்கே அரங்கேறும் மோசடிகள் காரணமாக கிராமப்புற மக்கள் பணத்தை முதலீடு செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். செல்போன் வளர்ச்சி காரணமாக தபால் துறையின் கடித போக்குவரத்து அதிகளவில் முடங்கி விட்டது. இருப்பினும் தபால்துறை தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அஞ்சலகங்களில் புதிய கணக்குகள் தொடக்கம், லைப் இன்சூரன்ஸ் திட்டம், செல்வ மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பண்டிகை காலங்களில் சீசனுக்கேற்ப சில திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தபால் துறையில் அனைத்து கிளை மற்றும் கிராமப்புற அஞ்சலக ஊழியர்களும் சேமிப்பு கணக்குகளை நிர்வகித்தல், மாதாந்திர சேமிப்பு கணக்கில் பணம் வரவு வைத்தல், முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், கடித போக்குவரத்து உள்ளிட்ட அன்றாட பணிகளோடு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். இதற்காக ஒவ்ெவாரு கோட்டத்திற்கு இலக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. நெல்லை கோட்டத்தில் மட்டுமே இம்மாதத்தில் கடந்த 10 தினங்களுக்குள் தபால் லைப் இன்சூரன்ஸ் திட்டத்தில் 20 லட்சம் புதிய பிரிமீய தொகை பிரிக்கவும், 10 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் தொடங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 ஆயிரம் கணக்குகளும், அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 200 கணக்குகளும், இந்தியன் போஸ்டல் பேமன்ட் பேங்க் திட்டத்தில் 4 ஆயிரம் கணக்குகளும் பிரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைய நெல்லை கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலக ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் பகுதி நேர அஞ்சல் ஊழியர்கள் கூட பகல் முழுவதும் பாடுபட்டு இலக்கை அடைய போராடி வருகின்றனர். நெல்லை கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இந்த இலக்கை அடைய முடியாமல் தபால் ஊழியர்கள் திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். நகர்புறங்களிலும் பணிச்சுமை காரணமாக தபால் ஊழியர்கள் இலக்கை எட்ட முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் தபால்துறையின் முதலீடு திட்டங்களில் தொடர்ந்து நடந்து வரும் மோசடி சம்பவங்களும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்ட அணைந்தபெருமாள் நாடானூர் அஞ்சலகத்தில் பிரமு அம்மாள்(70) என்னும் மூதாட்டி பீடி சுற்றி கிடைத்த பணம் ரூ.20 ஆயிரத்தை மத்திய அரசின் இரட்டிப்பு வட்டி திட்டத்தில் செலுத்தியிருந்தார்.

ஆனால் அந்த பணத்தை தபால் துறையினர் ஒரு தனியார் நிதி நிறுவன கணக்கில் செலுத்தி விட்டனர். எழுத படிக்க தெரியாத மூதாட்டியும் அப்பணம் கடைசி வரை கைக்கு கிடைக்காததால் மதுரை கோட்ட மண்டல இயக்குனர் வரை புகார் செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். இறுதியில் தபால் ஊழியர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அஞ்சல் சங்கங்கள் தலையீட்டால் அது ரத்து செய்யப்பட்டது. அம்பையிலும் இத்தகைய மோசடி சம்பவங்கள் அரங்கேறின. கிராமப்புறங்களில் தனியார் நிதி நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ள அஞ்சல் ஊழியர்கள், ‘கை நாட்டு’ வைக்கும் கிராமப்புற மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொண்டு முதலீட்டு பணத்தை, நிதிநிறுவனங்களின் திட்டங்களுக்கு திருப்பி விடுகின்றனர்.

இதனால் நேர்மையான அஞ்சல் ஊழியர்கள் திட்டங்களின் இலக்கை அடைவதற்கு கிராமப்புற மக்களை நாடிச் செல்லும்போது, அவர்களுக்கு முதலீட்டு தொகை கிடைப்பதில்லை. நெல்லை அஞ்சல் கோட்டத்தில் இலக்கை அடைய முடியாத தபால் ஊழியர்களிடமும், அஞ்சலக அதிகாரிகளிடமும் தற்போது விளக்கம் கேட்டு பெறப்பட்டு வருகிறது. கூட்டத்திற்கு வராத அஞ்சலக அலுவலர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதால், ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தென்மண்டல அளவில் தபால்துறையில் அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து, தங்கள் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என தென்மண்டல அஞ்சல் துறை தலைவருக்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »