Press "Enter" to skip to content

ஊட்டி என்.சி.எம்.எஸ்.பார்க்கிங் தளத்தில் கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

ஊட்டி: ஊட்டி என்.சி.எம்.எஸ். பார்க்கிங் தளத்தில் உள்ள பெட்டி கடைகளை அகற்றும் நடவடிக்கைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பின்புறம் என்.சி.எம்.எஸ். பார்க்கிங் தளம் உள்ளது. கூட்டுறவுத்துறை கட்டுபாட்டில் இப்பார்க்கிங் தளம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இப்பார்க்கிங் தளத்தை மேம்படுத்தும் நோக்கில் கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியது. ஆனால் இப்பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. இந்நிலையில் 30 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இவை விரைவில் டெண்டர் விடப்பட உள்ளன. ஆனால் என்.சி.எம்.எஸ். பார்க்கிங் தளத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 21 பெட்டி கடைகள் உள்ளன.

இங்கு ஸ்வெட்டர், ஹோம்மேட் சாக்லேட் கடை, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். மாதந்தோறும் என்.சி.எம்.எஸ். நிர்வாகத்திற்கு வியாபாரிகள் வாடகை கொடுத்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இப்பகுதியில் கடை வைத்துள்ளவர்களை உடனடியாக காலி செய்யுமாறு என்.சி.எம்.எஸ். நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், எவ்வித நோட்டீசும் வழங்காத நிலையில் திடீரென கடைகளை காலி செய்யுமாறு தெரிவித்ததால், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் புதுமந்து இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். வருவாய்த்துைறயினரும் அப்பகுதிக்கு சென்று வியாபாரிகளை தாங்களாகவே கடைகளை காலி செய்து கொள்ளுமாறு தெரிவித்தனர். மேலும் கடைகளை அப்புறப்படுத்துவதற்காக கிரேனும் வரவழைக்கப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் அடையவில்லை.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதியில் பெட்டி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். நாங்கள் கடை வைத்ததில் இருந்து என்.சி.எம்.எஸ். நிறுவனத்திற்கு தவறாமல் வாடகை கொடுத்து வருகிறோம். கடையை காலி செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரை சந்தித்தோம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் ரூ.4 லட்சம் வரை தர வேண்டும். அப்போது தான் புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகளை ஒதுக்கீடு செய்வோம் என தெரிவித்தனர்.
ஏழை எளிய மக்களான நாங்கள் இந்த பெட்டி கடைகளில் கிடைக்கும் சிறு வருமானத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களால் அவ்வளவு பணம் தர இயலாது. எனவே எங்களை காலி செய்யும் முடிவை கைவிடுவதுடன், புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகளை எங்களுக்கே வழங்க வேண்டும், என்றனர்.

இதனிடையே ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் பணம் கேட்டதாக வியாபாரிகள் கூறிய நிலையில், ஆளுங்கட்சியினர் பணம் கேட்டார்கள் என்று எப்படி நீங்கள் கூறலாம் என கூறி அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் வியாபாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து வியாபாரிகளிடம் பேசிய என்.சி.எம்.எஸ். நிர்வாகம், பார்க்கிங் தளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது கடைகள் உள்ள பகுதியில் வாகனங்கள் இடையூறின்றி சென்று வர வசதியாக தடுப்புசுவர் கட்ட வேண்டும். எனவே வியாபாரிகள் கடைகளை காலி செய்ய வேண்டும். புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளுக்கான டெண்டரின் போது தற்போது உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும், என்றனர். இதனை தொடர்ந்து வியாபாரிகள் தங்களது கடைகளை காலி செய்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »