Press "Enter" to skip to content

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்துமா? பள்ளிக்கல்வித்துறை நடத்துமா?: உயர்நீதிநீதி மன்றக் கிளை சரமாரி கேள்வி

மதுரை: 5 மற்றும் 8ம்  வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தடை விதிப்பது குறித்த வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்துமா? அல்லது பள்ளிக்கல்வித்துறை நடத்துமா? என உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், தற்போது தமிழக அரசு 5 மற்றும் 8ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்.

ஆனால் தற்போது 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்திற்கு இது முற்றிலும் எதிராக உள்ளது. கல்வி திட்டத்தை பொறுத்தவரையில் 8ம் வகுப்பு வரை மாணவர்களை தேர்ச்சி பெற செய்து அனைவரும் சமமாக கல்வி பெற வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும். ஆனால் இது அதற்கு எதிராக உள்ளது. மேலும் 5 மற்றும் 8வது படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களுக்கு அடுத்தகட்டமாக அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்த ஒரு தெளிவான அறிவிப்பு இல்லை. எனவே இம்முறை நடைபெறவுள்ள 5 மற்றும் 8ம்  வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனு தற்போது விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் சரமாரியான கேள்வி எழுப்பினார்கள்.

நீதிபதிகள் கேள்வி:

* இந்த தேர்வு எதன் அடிப்படையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது?

* அனைவருக்கும் கட்டாயக்கல்வி சட்டத்துக்கு 5 மற்றும் 8ம்  வகுப்பு பொதுத்தேர்வு முரண்பாடாக உள்ளது.

* பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும்?

* 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்துமா? பள்ளிக்கல்வித்துறை நடத்துமா?

* 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே திருத்தப்படுமா? அல்லது வேறு பள்ளிகளுக்கு அனுப்பித் திருத்தப்படுமா?

* மறுதேர்தலில் தேர்ச்சி பெறாத குழந்தைகளின் நிலை என்ன?

* தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும்? என்று தமிழக வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து தமிழக தொடக்க கல்வி துறை இயக்குநர் விரிவான பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 19ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுத்தேர்விலும் தேர்ச்சி பெறாவிட்டால் குழந்தைகளின் நிலை என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »