Press "Enter" to skip to content

கவனிச்சுக்கறேன்னா இப்படியா.. இல்லை “இப்படி”ய்யா..மக்கள் அரசியலுக்கு வெடிவைக்கும் பிரஷாந்த் கிஷோர்கள்

செய்தி தெரியுமா | 30-01-2020 | oneindia tamil

சென்னை: பிரஷாந்த் கிஷோர் போன்றவர்களை அரசியல்வாதிகளாகவே பார்க்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில், இவர்களைப் போன்ற கார்ப்பரேட் அரசியல் புரோக்கர்களை எப்படித்தான் நிதீஷ் குமார் போன்ற பழுத்த அரசியல்வாதிகள் நம்புகிறார்களோ தெரியவில்லை. பிரஷாந்த் கிஷோர் போன்ற கார்ப்பரேட் அரசியல் தரகர்கள் உண்மையில் இந்தியாவில் மக்களின் அரசியலை, மக்களுக்கான அரசியலை சீர்குலைத்தவர்கள்.

மக்களுக்கும், அரசியலுக்கும் நடுவே நின்று கொண்டு இவர்கள் செய்த காரியங்கள்தான் இன்று மக்களை வெகு தூரத்திற்கு அரசியல்வாதிகளிடமிருந்து அப்புறப்படுத்தி விட்டது. இயல்பான அரசியலுக்கு வேட்டு வைத்தவர்கள் இந்த கிஷோர்கள். அதுதான் உண்மை.

இன்று ஒருவர் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் போதும்.. கையில் கட்டுக் கட்டாக பணம் வைத்திருந்தால் போதும்.. இதுபோன்ற அரசியல் தரகர்கள் அதற்கான வேலையை செய்து கொடுக்கிறார்கள்.. இதுதான் இந்தியாவின் அரசியலா.. இதுதான் நாம் பார்த்த ஜனநாயகமா.. நிச்சயமாக இல்லை. அப்படிப்பட்ட அரசியலுக்கு முடிவு கட்டி விட்டு.. கார்ப்பரேட் அரசியலாக மாற்றி விட்டார்கள் இந்த பிரஷாந்த் கிஷோர் போன்றவர்கள்.

தேசிய பிரச்சனை

காமராஜர், அண்ணா போன்றோரது காலத்தில் மக்களை மட்டுமே நம்பி தேர்தலை சந்தித்தனர். இதேதான் தேசிய அளவிலும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரத்யேகமான மக்கள் மன ஓட்டம் உண்டு. தேசிய அளவிலான பிரச்சினைகளில் மக்கள் எப்படி அணுகுவார்கள், மாநிலப் பிரச்சினைகளை எப்படிப் பார்ப்பார்கள், உள்ளாட்சித் தேர்தல் என்று வந்தால் எப்படி மாறுவார்கள் என்பதை கணிக்கவே முடியாது. இதை நுனுக்கமான உள்ளூர் அரசியல் தெரிந்தவர்களால்தான் சரியாக புரிந்து கொள்ள முடியும்.

சரித்திரம்

தலைவர்கள் வேண்டுமானால் அரசியலில் இருக்கலாம்.. பல நூறு கட்சிகளும் கூட இருக்கலாம்.. ஆனால் மக்கள் மன ஓட்டத்தைப் புரிந்து கொள்ளாத எந்தக் கட்சியும், தலைவரும் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. இப்படிப்பட்ட அரசியலைத்தான் 10, 15 வருடத்திற்கு முன்பு வரை நாம் பார்த்து வந்தோம். மக்களை விலக்கி விட்டு எந்த அரசியல் கட்சியும் இருந்ததில்லை. கட்சிகள் வாழ்ந்ததில்லை. தலைவர்களும் சாதித்ததில்லை.

ஆட்சியாளர்கள்

எதைச் செய்தாலும் இது மக்கள் மத்தியில் எடுபடுமா, என்ன மாதிரியான ரியாக்ஷன் வரும் என்று பயந்து பயந்துதான், பார்த்துப் பார்த்துதான் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் செய்து வந்தனர். மக்களிடம் அன்று பயம் இருந்தது. மக்கள் ஏதாவது நினைப்பார்களே என்ற கவலை இருந்தது. அதனால்தான் ஆட்சியாளர்கள் ஒரு பக்கம் தவறு செய்தாலும், மறுபக்கம் மக்களுக்கும் ஏதாவது செய்ய நினைத்தார்கள். இந்த அரசியலைத்தான் இன்று பிரஷாந்த் கிஷோர்கள் தூக்கிப் போட்டு உடைத்து சின்னாபின்னமாக்கி விட்டனர்.

கொஞ்சம் நடிங்க பாஸ்

மக்களைப் பற்றி கவலையே படாதீங்க. மக்களை திசை மாற்றத் தெரிஞ்சுக்கங்க.. நீங்க என்ன செய்தாலும் அதை மக்கள் மனதிலிருந்து எளிதாக துடைத்தெறிய முடியும்.. என்று அரசியல் தலைவர்களை, கட்சிகளை மடை மாற்றி.. “கொஞ்சம் நடிங்க பாஸ்” என்று டிவியில் ஒரு புரோகிராம் வருமே.. அந்த ரேஞ்சுக்கு தலைவர்களை மாற்றி கெடுத்து வைத்துள்ளனர் இந்த அரசியல் கார்ப்பரேட் புரோக்கர்கள். இதுதான் நிதர்சனம். உண்மை.

கருணாநிதி

நல்லா யோசிச்சுப் பாருங்க.. காமராஜரோ, அண்ணாவோ, எம்ஜிஆரோ இவர்கள் எல்லாம் மக்களிடம் எந்த அளவுக்கு நெருங்கிப் பழகி வந்தனர். அதேபோல கருணாநிதி, ஜெயலலிதா.. எத்தனை மக்கள் நலத் திட்டங்கள்.. கணக்கே இல்லை… இன்று வரை நினைவு கூறத் தக்க வகையிலான திட்டங்கள் எத்தனை எத்தனை.. ஆனால் இன்று இந்த கார்ப்பரேட் அரசியல்ஆலோசகர்கள் உள்ளே புகுந்தது முதல் நேரடியான மக்கள் தொடர்பை தலைவர்கள் இழந்து விட்டனர். தேர்தலுக்கு முன்பு மட்டும் நாடகக்காரர்களாக மாறி நடக்கிறார்கள், டீ சாப்பிடுகிறார்கள்.. மக்களுடன் அமர்ந்து போஸ் கொடுக்கிறார்கள்.. தேர்தல் முடிந்ததும் விடு ஜூட்.

நிதீஷ்குமார்

இதெல்லாமும் முன்பும் கூட இருந்தது… ஆனால் யாரும் சொல்லிக் கொடுக்காமல் தலைவர்கள் அதை இயல்பாகவே செய்தனர். உண்மையிலேயே மக்களுடன் மக்களாக கலந்து இருந்தனர். இன்று பிரஷாந்த் கிஷோர்.. நிதீஷ் குமாரைப் பார்த்து சொல்கிறார்கள்.. மீண்டும் முதல்வராக வாழ்த்துகள் என்று.. இதைப் பார்த்தபோது ‘தேவர் மகன்’ படத்தில் சங்கிலிமுருகன் ஒரு வசனம் சொல்வாரே.. “கவனிச்சுக்கறேன்னா இப்படியா.. இல்லை.. இப்படிய்யா” என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது. அதாவது நீங்க மறுபடியும் எப்படி முதல்வராகறீங்கன்னு நான் பார்க்கிறேன்னு அர்த்தம் கிஷோர் சொன்ன வாழ்த்துக்கு!!

ஆபத்துதான்

இப்படிப்பட்ட கிஷோர்களிடம்தான் இன்றைய அரசியல் கட்சிகள் பலவும் சிக்கிக் கிடக்கின்றன.. தெரிந்தோ தெரியாமலோ. மக்களுக்கு இந்த அரசியல் ஆலோசகர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஒரு பலனும் இல்லை. உண்மையில் இவர்கள் மக்களிடமிருந்து கட்சிகளை தூரத் தள்ளிக் கொண்டு போய் வைக்கும் மோசமான வேலையைத்தான் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பார்த்தால் பிரஷாந்த் கிஷோர்கள் போன்றோர் இந்திய அரசியல் கட்டமைப்புக்கே.. ஏன் ஜனநாயக அரசியலுக்கே ஆபத்து என்பதே உண்மை.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »