Press "Enter" to skip to content

பாரம்பரியம் மிக்க மன்னார்குடி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா?..9 ஆண்டுகளாக போராடும் திமுக எம்எல்ஏ

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 154 வருட பாரம்பரியம் மிக்கது. நாளுக்கு நாள் நகரத்தில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. சுமார் 22 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் தற்போது 1 லட்சத்திற்கும் மேற் பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகரத்தில் கிழக்கு பகுதிகளில் 4 வார்டுகளில் மட்டுமே பாதாள சாக்கடை வசதி செய்யப் பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தல்களின் போதும் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றால் மன்னார்குடி நகரத்திற்கு ஒருங் கிணைத்த புதிய பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வருவோம் என வாக்குறுதிகளை அளிப்பது வாடிக்கையாக உள்ளது. ஆனால் தற்போது வரை பாதாள சாக்கடை திட்டம் நகரத்தில் கொண்டு வரப் பட வில்லை. இந்நிலையில் மன்னை தொகுதி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னார்குடி நகரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து எம்எல்ஏ டிஆர்பி ராஜா கூறுகையில், மன்னார்குடியில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 1975 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு சுமார் 8 கிமீ தூரத்திற்கு போடப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2012 ம் ஆண்டு இது குறித்து சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பினேன். அதற்கு அப்போதைய நகரா ட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பதிலளிக்கையில் மன்னார்குடியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு நகரை 3 பகுதிகளாக பிரித்து அதற்கு 96.25 கோடி மதிப்பீடு செய்ய பட்டுள்ளதாகவும், நிதி ஆதாரம் கிடைத்தவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணிகள் துவங்கும் என்று உறுதியளித்தார். ஆனால் அமைச்சர் கூறியபடி பணிகள் துவக்கப்படவில்லை. நடப்பாண்டு ஜூலை மாதம் பாதாள சாக்கடை திட்டம் குறித்து மீண்டும் நான் சட்டமன்றத்தில் வினா எழுப்பினேன்.

தொடர்ந்து கடந்த 9 ஆண்டுகளாக மன்னார்குடி பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக சட்டமன்றத்தி கேள்விகள், கவர்னர் உரைக்கு திருத்தங்கள், மானிய கோரிக்கை விவாதங்கள் போன்ற பல கட்ட முயற்சிகள் வழியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். எனவே மேலும் மேலும் காலம் தாழ்த்தாமல் இந்த வருடமாவது மன்னார்குடி நகரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனருக்கு கடிதம் எழுதி யுள்ளேன். அதற்கு உரிய பதிலை எதிர்பார்த்து உள்ளேன். இனியும் கால தாமதம் செய்தால் மன்னார்குடி மக்கள் நலன் கருதி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என எம்எல்ஏ டிஆர்பி ராஜா கூறினார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »