Press "Enter" to skip to content

பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி: இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னை:

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வந்தன. இதுதொடர்பாக வேலைநிறுத்தம் போராட்டத்தையும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. இதையடுத்து மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையரிடம், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கடந்த 27-ந்தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. எனவே 31-ந் தேதி (இன்றும்), 1-ந்தேதி (நாளையும்) வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

இந்த நிலையில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நேற்று மும்பையில் வங்கி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படாததால், திட்டமிட்டபடி இன்றும்(வெள்ளிக்கிழமை), நாளையும் வங்கிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் சி.எச்.வெங்கடாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

30 மாதமாக நிலுவையில் இருக்கும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை முறையாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நல ஆணையர், வங்கி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 60 ஆயிரம் பேரும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் 31 மற்றும் 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் இயல்பான வங்கி சேவை பாதிக்கப்படும்.

சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் நாளை(இன்று) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதேபோல அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »