Press "Enter" to skip to content

எப்போ பார்த்தாலும் பாகிஸ்தான், சிஏஏ பேச்சுதான்… இதையே கூவுனா நாடு வளராது… மோடியை மானாவாரியாக தாக்கிய ராகுல்!

எப்போதும் பாகிஸ்தான், சிஏஏ, என்ஆர்சி என்று கூவிக் கொண்டேயிருப்பதால் நாடு வளர்ச்சி அடைந்துவிடாது என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் விவகாரங்களில் பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வைச்சு செய்துகொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் ராகுல் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “பொருளாதாரம் பற்றி பிரதமர் மோடிக்கு ஒன்னும் தெரியாது. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்றுகூட அவருக்கு தெரியாது” என்று கடுமையாகத் தாக்கி பேசினார். இந்நிலையில் தனது தொகுதியான வயநாட்டில் நடந்த அரசியல் சட்ட அமைப்பு பாதுகாப்பு பேரணியில் பங்கேற்று ராகுல், மோடியை மீண்டும் சீண்டியுள்ளார்.
2 கி.மீ. நீள பேரணியின் முடிவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ராகுல், “நாடு  இன்று அனைத்து துறைகளிலும் பின்னடைவை சந்தித்துவருகிறது. நாட்டின் பொருளாதாரம் முடங்கிவிட்டது. இந்தப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மாறாக நாட்டுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு விற்பனை செய்கிறது. ஏற்கனவே அனைத்து துறைமுகங்களையும் அதானிக்கு மோடி விற்றுவிட்டார்.


மோடியின் அடுத்த விற்பனை இலக்கு ரயில்வே துறைதான். அதையும் மோடி விரைவில் விற்றுவிடுவார். பொதுத்துறை நிறுவனங்களை விற்க மோடிக்கு யார் அனுமதி கொடுத்தது? பிரதமர் மோடியும், கோட்சேயும் ஒரே கொள்கையைப் பின்பற்றுபவர்கள்தான். கோடிக்கணக்கான இந்திய மக்களின் பிரச்னையை கேட்பதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்காது. தற்போது இந்தியர்களுக்கே தான் ஓர் இந்தியன் என்பதை நிரூபித்தாக வேண்டிய பரிதாபம் ஏற்பட்டுள்ளது. 
 எப்போதும் பாகிஸ்தான், சிஏஏ, என்ஆர்சி என்று கூவிக் கொண்டேயிருப்பதால் நாடு வளர்ச்சி அடைந்துவிடாது. மோடி நாட்டில் வெறுப்பை வளர்த்து வருகிறார். இதனால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. நாட்டையும் அவர் பிளவுபடுத்த சதி வருகிறார்.” என்று  பேசினார்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »