Press "Enter" to skip to content

“புதிய பாதை”யில் திமுக.. “பிள்ளையார் சுழி” போட்ட திருச்சி மாநாடு.. திருப்பம் தருமா?

சென்னை: திமுக வரலாற்றில் எத்தனையோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றது உண்டு.. ஆனால் அடிப்படை கொள்கையையே கைவிடும் புதிய பாதையை நோக்கி திமுக பயணிப்பதற்கு தற்போதைய திருச்சி மாநாடு ‘பிள்ளையார் சுழி’ போட்டிருக்கிறது.

திராவிடர் இயக்கத்தின் வரலாற்றில் திருச்சிக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் உண்டு. தீரர்கள் கோட்டமாம் திருச்சி என திராவிடர் இயக்க பேச்சாளர்கள் முழங்கும்போது மலைக்கோட்டையே கிடுகிடுக்கும் வகையில் மாநாடுகளில் கரவொலி விண்ணை பிளக்கும்.

திமுகவின் வரலாற்றில் திருச்சி என்றாலே திருப்புமுனைதான் என்கிற சரித்திரம் படைத்த இடம். திமுக 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது தேர்தலில் பங்கேற்பது இல்லை என்ற கொள்கையை கடைபிடித்தது.

imageசட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்க… ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த உதயநிதி

வாக்கெடுப்பு நடத்திய திமுக

1951-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. இதன்பின்னர் தேர்தல் அரசியலில் பங்கேற்கலாமா? இல்லையா என்பது குறித்து திமுகவில் விவாதம் நடைபெற்றது. இந்நிலையில்தான் 1956-ல் திருச்சியில் திமுகவின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத ஒரு நடவடிக்கையாக தேர்தல் அரசியலில் பங்கேற்பது தொடர்பாக தொண்டர்களிடத்தில் வாக்கெடுப்பு நடத்தியது திமுக. தில் பெரும்பான்மையான தொண்டர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என வாக்களித்தனர். இதனால் தேர்தல் அரசியலில் திமுகவும் பங்கேற்றது.

திமுக ஆட்சி

1957-ம் ஆண்டு தேர்தலை முதல் முறையாக எதிர்கொண்டது திமுக. 1967 தேர்தலில் திமுக அமோக வெற்றியைப் பெற்றது. திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு அப்போது வித்திடப்பட்டது. இந்திய அரசியலிலேயே புதிய அத்தியாயமாக தமிழகத்தில் அரியணை ஏறியது திமுக. அன்று முதல் இன்று வரை திராவிட இயக்க ஆட்சிதான் தமிழகத்தில் தொடருகிறது.

திருச்சி திமுக மாநாடுகள்

முதல்வராக இருந்த அண்ணாவின் திடீர் மறைவுக்குப் பின்னர் திமுக, திருச்சியில் மாநாடு ஒன்றை நடத்தியது. இம்மாநாட்டில்தான் ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் என்பது உள்ளிட்ட திமுகவின் ஐம்பெரும் லட்சிய முழக்கங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன. இதன்பின்னர் 1990, 1995, 2006 ஆகிய ஆண்டுகளில் திருச்சியில் திமுகவின் மாநில மாநாடுகள் நடைபெற்றன.

புதிய திருப்பம் தரும் மாநாடு

1995, 2006 திருச்சி மாநாடுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சியை கைப்பற்றியிருந்தது. இத்தகைய நெடிய வரலாறுகளால் திருச்சி என்றாலே திருப்புமுனை என்று திமுகவின் வரலாற்று பக்கங்கள் எழுதி வைத்திருக்கின்றன. இப்போதும் திமுகவில் புதிய திருப்பத்தை திருச்சி உருவாக்கி கொடுத்திருக்கிறது.

பகுத்தறிவுக்கு குட்பை

எந்த திருச்சியில் திராவிடர் இயக்கத்தின் லட்சியங்களாக திமுகவின் ஐம்பெரும் முழக்கங்கள் பிரகடனப்படுத்தப்பட்டனவோ அதே திருச்சியில்தான் பகுத்தறிவு பாதைக்கு விடைசொல்லி இருக்கிறது திமுக.. திருச்சியில் இன்று திமுகவின் உள்ளாட்சி பிரநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் கட்சி கொடி ஏற்றப்படவில்லை; திமுகவின் பிரசார பாடல்கள் இடம்பெறவில்லை. ஆனால் திமுகவின் வரலாற்றிலேயே முதல் முறையாக கட்சி மாநாட்டில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மங்கல இசை இசைக்கப்பட்டது.திமுக வரலாற்றில் இனி நிகழ்ச்சிகள், மாநாடுகளில் இந்து மத சம்பிரதாயப்படி திருச்சியை பின்பற்றி குத்துவிளக்கேற்றுதல், மங்கல இசை இசைத்தல் என்கிறவை தவறாமல் இடம்பெறக் கூடும் ஆம் திமுகவின் புதிய பாதைக்கு பிள்ளையார் சுழி போட்டு கொடுத்திருக்கிறது நேற்றைய தீரர் கோட்டமாம் திருச்சி!

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »