Press "Enter" to skip to content

புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தோல்வி: வங்கிகள் வேலைநிறுத்தம் 10 லட்சம் ஊழியர் பங்கேற்பு

சென்னை: புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது. இதில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த வங்கிகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக, 43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 56 லட்சம் காசோலைகளின் பரிவர்த்தனைகள், பல ஆயிரம் கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு கிடைக்கிறது. கடந்த 2017-இல் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் இது வரை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி முடிவடைந்ததால் இன்று போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. அதன்படி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உட்பட பல்வேறு வங்கி சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த வங்கி கிளைகள் முன் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் 43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 56 லட்சம் காசோலைகளின் பரிவர்த்தனைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோடி கணக்கில் பண பரிவர்த்தனையிம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: இந்திய வங்கிகள் சங்கத்துடன், நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. இதனால், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில், 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளோம். இதன் காரணமாக, சென்னையில் உள்ள காசோலை பரிவர்த்தனை மையத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 16 லட்சம் காசோலைகள் தேங்கும். பல ஆயிரம் கோடி கணக்கில் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல, மும்பை மையத்தில், 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 26 லட்சம் காசோலைகள்; டில்லி மையத்தில், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 14 லட்சம் காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கும். நாடு முழுவதும், மொத்தம், 43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 56 லட்சம் காசோலை பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகள் மூடப்படும் என்பதால் பல ஆயிரம் கோடியில் பண பரிவர்த்தனைகளும் பாதிக்கப்படும் என்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »