Press "Enter" to skip to content

தஞ்சை கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி – மதுரை உயர்நீதிநீதி மன்றம் தீர்ப்பு

தஞ்சை பெரிய கோவிலில் வருகிற 5-ந்தேதி தமிழ்-சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகத்தை நடத்தலாம் என அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

மதுரை:

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் முழுக்க முழுக்க தமிழிலேயே வேதங்களையும், மந்திரங்களையும் பாட உத்தரவிட வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையை சேர்ந்த திருமுருகன், தமிழ் தேச பொதுவுடைமை கட்சி தலைவர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி செந்தில்நாதன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அதேபோல சமஸ்கிருத மொழியில்தான் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று சென்னை மயிலாப்பூர் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகள் அனைத்தும் ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்களின் குற்றச்சாட்டுகளை அறநிலையத்துறை மறுத்தது. மேலும், கும்பாபிஷேக விழாவில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சமஸ்கிருதம், தமிழ் என 2 மொழிகளிலும் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் அறநிலையத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தஞ்சை கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த விழாவையொட்டி நடக்கும் யாகசாலை பூஜையில் அபிராமி அந்தாதி, பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், திருமுறை பாராயணம் ஆகியவற்றை படிப்பதற்காக பக்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆகம விதிகளின்படி தமிழ், சமஸ்கிருத மொழிகள் பயன்படுத்தப்படும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

தஞ்சை தேவஸ்தான உதவி கமிஷனர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “தஞ்சை பெரியகோவில் தொல்லியல்துறை பராமரிப்பின்கீழ் உள்ளது. இங்கு பூஜை நேரங்களில் திருமுறைகள் ஓதுவதற்காக 2 ஓதுவார்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளனர். எல்லா பூஜையின்போதும் திருமுறைகள் ஓதப்படுகிறது. வருகிற 5-ந்தேதி நடக்க உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலையில் திருமுறைகளை படிக்க சிவனடியார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு புகாருக்கும் இடமளிக்காத வகையில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இந்த விழாவுக்கான பணிகள் நடக்கின்றன” என்று கூறியிருந்தார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், “தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆகம பள்ளிகளில் படித்து பயிற்சி பெற்றுள்ள அனைத்து சாதியை சேர்ந்த அர்ச்சகர்களையும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாகவும், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், கடந்த காலங்களை போல ஆகம விதிகளை பின்பற்றியும் இந்த விழா நடத்தப்படுகிறது என்றும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

எனவே கும்பாபிஷேகத்தில் சமஸ்கிருதத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது தெரிகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மீறினால் மட்டுமே மத வழிபாடுகள், கோவில் விழாக்களில் கோர்ட்டு தலையிட முடியும். இங்கு அதுபோல எதுவும் இல்லை என்பதால், இந்த விஷயத்தில் கோர்ட்டு தலையிட தேவையில்லை.

தஞ்சை கோவிலில் வருகிற 5-ந்தேதி கும்பாபிஷேகத்தை நடத்தி, அதுதொடர்பான அறிக்கையை 4 வாரத்தில் அதிகாரிகளும், கோவில் நிர்வாகமும் தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »