Press "Enter" to skip to content

நிதிப்பற்றுக்குறை முதல் ஜிஎஸ்டி வரை.. சவால் மேல் சவால்.. எப்படி சமாளிப்பார் நிதி அமைச்சர் நிர்மலா

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான சவால்களை எதிர்கொள்ள இருக்கிறார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

மத்திய பாஜக அரசின் இரண்டாவது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும், இரண்டாவது பட்ஜெட் ஆகும் இது. இதனால் இந்த பட்ஜெட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பட்ஜெட் 2020 LIVE UPDATES

எதிர்பார்ப்பு

இந்த பட்ஜெட்டில் மொத்தம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 10 விதமான சவால்கள் இருக்கிறது.

அதன்படி மத்திய அரசின் மொத்த வருவாய் ரசீதுகள் தொகை மிக மோசமான அளவில் குறைந்துள்ளது. இந்திய பட்ஜெட்டில் மொத்தம் 1.7 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை சரி காட்டும் வகையில்தான் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.அதாவது 11% பட்ஜெட் அறிவிப்புக்கு இன்று எங்கிருந்து பணம் வரும் என்று தெரியாது. அதை மனதில் வைத்துதான் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல் மத்திய அரசுக்கான நேரடி வரி வருமானம் மிக மோசமாக உள்ளது. 13.35 லட்சம் கோடி இதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் , வெறும் 6 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே இதில் வந்துள்ளது. இந்த வரி வருவாய் இழப்பை சமாளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும்.

இன்னொரு பக்கம் கார்ப்பரேட் வரி வருவாயும் மிக மோசமாகி உள்ளது. தற்போது கார்ப்ரேட் வரி வருவாயில் 1.45 லட்சம் கோடி ரூபாய் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதேபோல் ஜிஎஸ்டி வரி வருவாயும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. இந்த வருடம் ஜிஎஸ்டி மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு இழக்கும் என்கிறார்கள். இதை சமாளிக்கும் பட்ஜெட் இப்போது தேவை.

நாடு முழுக்க வேலை வாய்ப்பு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்தியாவில் இதுதான் மிக மோசமான வேலைவாய்ப்பு இன்மை காலம் ஆகும். அதேபோல் பொருளாதார சீர்கேடும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இதை எல்லாம் எப்படி நிர்மலா சீதாராமன் சரி செய்ய போகிறார் என்று தெரியவில்லை.

என்ன கிராமங்கள்

கடந்த வருடம் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அளவில் கிராமப்புற திட்டங்கள் குறித்த அறிவிப்பு இல்லை. விவசாயம், பால் உற்பத்தி, மீன் பிடி தொழில், மற்ற கிராம தொழில்கள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாவில்லை. இந்தியாவின் பொருளாதாரம் நலிவடைய இதுவும் மிக முக்கிய காரணம் ஆகும். இதை சமாளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும்.

அதேபோல் மத்திய அரசு, மொத்த நிதி பற்றாக்குறையயை சரி செய்யும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். நிதி பற்றாக்குறை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கான இலக்கை மத்திய அரசு மாற்ற வேண்டும். ஜிடிபி தொடர்ந்து சரிய இதுவும் ஒரு காரணம் ஆகும். இதனால் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும்.

வேறு என்ன

இன்னொரு பக்கம் தனியார்மயமாக்கல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 1.5 லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு தனது முதலீட்டை திரும்ப பெற வாய்ப்புள்ளது. ஆனால் இதை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

2018ல் இருந்து வங்கிகள் துறை பெரிய அளவில் அடி வாங்கியுள்ளது. அதை சமாளிக்கும் வகையில் இன்றைய அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »