Press "Enter" to skip to content

குடியரசுத் தலைவர் உரையில் ஒன்றுமில்லை: எதிர்க்கட்சிகள்! …6 நிமிட வாசிப்புகுடியரசுத் தலைவர் உரைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள…

குடியரசுத் தலைவர் உரைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 31) துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டை அணிந்தபடி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

“நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சட்டம்” என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த சமயத்தில் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ‘அவமானம், அவமானம்’ என்று கூச்சலிட்டதோடு, பாதாகைகளையும் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “பிரதமர் நரேந்திர மோடியின் மாற்றத்திற்கான தலைமையின் கீழ் இந்தியா எவ்வாறு உயர்கிறது என்பது குடியரசுத் தலைவர் உரையில் தெளிவாகத் தெரிகிறது. வளர்ச்சிப் பகுதிகளில் ஒரு புதிய பாய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பிரிவு 370 ஐ ரத்து செய்தது, சிஏஏ, உபா மற்றும் போக்ஸோ சட்டங்கள் போன்ற நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் இந்தியா ஒரு தீர்க்கமான பாதையில் முன்னேறி வருவதைக் காட்டுகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், “மத்திய அமைச்சரவை தயாரித்த உரையை மட்டுமே குடியரசுத் தலைவர் வாசிப்பார். உரையில் சிஏஏவை நிறைவேற்றியதை ஒரு சாதனை என்று கூறுவது துரதிர்ஷ்டவசமானது. சிஏஏவை சாதனை என்று அரசாங்கம் கூறுவதை விட பெரிய அவமானம் இருக்க முடியாது” என்று விமர்சித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், “இந்தாண்டுக்கான அரசின் முதல் கொள்கை அறிக்கையாக பார்க்கப்படும், குடியரசுத் தலைவர் உரையில் பொருளாதார சரிவை எவ்வாறு அரசு எதிர்க்கொள்ள போகிறது என்பது தொடர்பாக எதுவும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஆனால், அதில் ஒன்றுமில்லை. கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் கேட்ட எல்லா அர்த்தங்களையும் இழந்த பழைய முழக்கங்களும், காது புளிக்க வைக்கும் வாக்கியங்களும் மட்டுமே குடியரசுத் தலைவரின் உரையில் இடம்பெற்றிருந்தன” என்று விமர்சித்தார்.

மேலும், “துரதிருஷ்டவசமாக பொருளாதார நிலைமை குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. வேலையிழப்பு, வேலையின்மை அதிகரித்தல் மற்றும் நுகர்வோர் விலைவாசி உயர்வு குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. குறிப்பாக சிறுகுறு தொழில் துறையில் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்படுவது குறித்த ஒரு வார்த்தை கூட இல்லை. தடைப்பட்ட திட்டங்கள் மற்றும் முதலீடு வரத்து குறைவு பற்றியும் குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது” என்றும் தெரிவித்தார்.

விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “இன்று(31.01.2020) நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட குடியரசுத் தலைவரின் உரை பாஜக தலைவரின் அரசியல் அறிக்கையாக இருந்ததே தவிர, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான இந்திய முதல் குடிமகனின் உரையாக இல்லை. இது மிகவும் வேதனையும் ஏமாற்றமும் அளிக்கிறது.முன்னோட்டமாகக் கருதப்படும் குடியரசுத் தலைவரின் உரை வெற்று அரசியல் அறிக்கையாக முடிந்திருக்கிறது” என்று சாடியுள்ளார்.

இன்று நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்த அரசின் சாதனைகளில் ஒன்றாகக் குடியரசுத் தலைவர் பாராட்டியிருப்பது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று கூறியுள்ள திருமாவளவன், “நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் நன்மை பயப்பதாகவோ பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்பதாகவோ இருக்காது என்பதையே குடியரசுத் தலைவரின் உரையிலிருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. அப்போது, குடியரசுத் தலைவர் உரையை எதிர்த்து தீர்மானம் கொண்டுவரவும் எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »