Press "Enter" to skip to content

நீட்-யாருக்கும் விலக்கு கிடையாது: மத்திய அரசு4 நிமிட வாசிப்புமருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து யாருக்கும் விலக்கு கிடையாது என மத்திய …

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து யாருக்கும் விலக்கு கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மிகுந்த பாதிப்படைவார்கள் என்று கூறி தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. ஆனாலும், நீட் தேர்விலிருந்து விலக்கு இல்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

இந்த நிலையில் நீட் தேர்வு தொடர்பாக கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, சிபிஐ எம்.பி செல்வராஜ் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதில், “இந்த கல்வியாண்டுக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் உள்ள அரசு, சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் மொத்தமுள்ள 4850 இடங்களில் 100 மாணவர்கள் மட்டுமே தனியார் பயிற்சி மையங்களில் படிக்காமல் தேர்வாகியுள்ளனர். தமிழகம் உள்பட ஏதேனும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து எம்பிபிஎஸ் படிப்புக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரப்பட்டதா?” என்றும்,

ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கிடைக்கும் வகையில், தமிழகம் உள்பட விலக்கு கேட்ட மாநிலங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் எண்ணம் மத்திய அரசிடம் இருக்கிறதா? அப்படியென்றால் அதுபற்றிய தகவல்கள் வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

இதற்கு நேற்று (ஜனவரி 31) எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், “ அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவம் படிக்க நீட் என்ற பெயரிலான பொதுவான நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் பரிந்துரைக்கிறது. எனினும், நீட் தேர்வின் மூலம் தேர்வானவர்களில் தனியார் நீட் பயிற்சி மையங்களில் படித்தவர்கள், படிக்காதவர்களின் பட்டியல் மத்திய அரசிடம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து சுகாதாரத் துறைக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால், அவை இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்திற்கு நேரெதிராக உள்ளன. எனவே, அதனை சுகாதாரத் துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய மருத்துவ கழகம் சட்டப்படி நடத்தப்படும் நீட் தேர்விலிருந்து நாடு முழுவதும் யாருக்கும் விலக்கு கிடையாது” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »