Press "Enter" to skip to content

ஆதிச்சநல்லூர் உட்பட 5 இடங்களில் அருங்காட்சியகம்.. பலநாள் கோரிக்கையை நிறைவேற்றிய நிர்மலா சீதாராமன்!

டெல்லி: இந்தியாவில் தூத்துக்குடியில் உள்ள ஆதிச்சநல்லூர் உட்பட ஐந்து இடங்களில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை தற்போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

இதில், இந்தியாவில் தூத்துக்குடியில் உள்ள ஆதிச்சநல்லூர் உட்பட ஐந்து இடங்களில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மொத்தம் நாடு முழுக்க ஐந்து இடங்களில் அருங்காட்சியம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ராக்கிகார்க்கி, ஹஸ்தினாபோர், சிவ்சாகர், தோலாவீரா மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அதேபோல் நாடு முழுக்க சுற்றுலா துறையை வளர்க்க 25 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும், என்றுள்ளார்.

உலகின் பழமையான நகரங்களில் ஆதிச்சநல்லூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களை பிரம்மிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.

தூத்துக்குடியில் உள்ள இந்த பழமையான நகரத்தில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் எல்லாம் நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது இங்கு எடுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகிறது. புதிதாக அங்கு அகழ்வாராய்ச்சி எதுவும் நடக்கவில்லை.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரு பொருள்களில் ஒன்று கி.மு.905, மற்றொன்று கி.மு.971 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. கார்பன் சோதனை மூலம் இதன் வயது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்குதான் மியூசியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதேபோல் ராஞ்சியில் பழங்குடி மக்களுக்காக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »