Press "Enter" to skip to content

இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு இதயத்தை எடுத்துச்சென்ற உலங்கூர்தி வயலில் விழுந்து விபத்து

ஜப்பானில் இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு இதயத்தை எடுத்துச்சென்ற போலீஸ் ஹெலிகாப்டர் நெல் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

டோக்கியோ:

ஜப்பானில் புகு‌ஷிமாவில் 50 வயது கடந்த ஒருவர் நேற்று மூளைச்சாவு அடைந்தார். அவரது இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு பொருத்திக்கொள்ள குடும்பத்தினர் சம்மதம் அளித்தனர். அதைத்தொடர்ந்து அவரது இதயத்தை அகற்றி, டோக்கியோவில் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவருக்கு பொருத்த முடிவானது. உடனே டாக்டர்கள் அவரது இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

அந்த இதயத்தை விரைவாக கொண்டு போய்ச்சேர்ப்பதற்காக போலீஸ் ஹெலிகாப்டரில் எடுத்துச்சென்றனர். அந்த ஹெலிகாப்டரில் 3 போலீஸ் அதிகாரிகள், 2 தொழில்நுட்ப உதவியாளர்கள், 2 மருத்துவ பணியாளர்கள் என 7 பேர் இருந்தனர்.

ஆனால் அந்த ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக கொரியாமா என்ற இடத்தில் உள்ள நெல் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடம் அளிப்பதாக உள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. டோக்கியோ பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் நடைபெற இருந்த இதய மாற்று அறுவை சிகிச்சை ரத்தானது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »