Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மருத்துவ உதவிக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் – தமிழக சுகாதாரத்துறை தகவல்

கொரோனா வைரஸ் குறித்த மருத்துவ உதவி பெற 24 மணிநேரமும் எங்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை:

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது உலகளவில் மக்களிடையே பெரும்பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேசிய நோய் கண்காணிப்பு நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 19-ந்தேதி பெறப்பட்ட எச்சரிக்கை தகவலையடுத்து தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி வரை சீனாவில் இருந்து சென்னை வந்த 394 பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு, பொது சுகாதாரத்துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்காக தனி சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்து மருத்துவ உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 044-29510400, 044-29510500 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் 9444340496, 8754448477 என்ற செல்போன் எண்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் 104 என்ற சேவை மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »