Press "Enter" to skip to content

3-வது ஆண்டாக நடைபெறும் அழகுமலை ஜல்லிக்கட்டு: போட்டியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

திருப்பூர்: பொங்கலூர் அருகே அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டம் பொங்கலுார் ஒன்றியம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி கால்கோள் விழா நடந்தது. அதன் அடிப்படையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கப்பட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதில் சில காளைகள், வீரர்களை நெருங்க விடாமல் விரட்டியும், முட்டியும் தூக்கி வீசியும் சென்றன. சில காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் தன்னை பிடித்து பாருங்கள் என்று சவால் விடும்வகையில், மைதானத்தில் நின்று விளையாடியது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, மேஜை, சைக்கிள், ஹெல்மேட், மிக்சி, சில்வர் பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள்,  பிளாஸ்டிக் பொருட்கள், ரொக்கப்பணம் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படுகிறது. போட்டியை காண பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்துள்ளனர்.

பார்வையாளர்கள் அமர்வதற்கான கேலரி, 400 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர் பகுதிக்குள், காளைகள் நுழையாமல் இருக்க, இருபுறமும் இரும்பு கிரில் பொருத்தப்பட்டுள்ளது. காளைகள் வெளியிலிருந்து வாடிவாசல் வரை வருவதற்கு, இருபுறமும் மரக்கம்புகள் நடப்பட்டு, தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. போட்டியில், அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டு காளைகள், பாதுகாப்பாக வெளியேறவும், அவை தப்பிச்செல்லாமல் பிடிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் காயம்பட்டால், அவர்களுக்கு அருகிலேயே சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களை சேர்ந்த காளைகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த காளைகளும் பங்கேற்கின்றன.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »