Press "Enter" to skip to content

தனுஷ்கோடி தென்கடற்கரையில் கடல் ஆமை முட்டையிடும் பருவம் துவக்கம்: முட்டை சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே தென்கடற்கரையில் கடல்  ஆமை முட்டையிடும் சீசன் துவங்கியது. ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை கடற்கரையில் பள்ளம் தோண்டி முட்டையிடும். ஒரு வளர்ந்த ஆமை 50 முதல் அதிகபட்சமாக 190 முட்டைகள் வரை இடும். 45 முதல் 48 நாட்களில் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவரத்துவங்கும். ஒரு நூற்றுக்கணக்கில் முட்டைகள் இட்டும், ஆயிரம் ஆமை குஞ்சுகளில் ஒன்று மட்டுமே வளர்ந்த ஆமையாக மாற முடியும். தன்னுடைய வாழ்நாள் முழுக்க இயற்கை மற்றும் செயற்கையான சவால்களை ஆமைகள் சந்தித்து வருகிறது.இரவு நேரத்தில் மட்டும் கரைக்கு வருகின்ற ஆமைகள் முட்டையிட்டுவிட்டு மீண்டும் கடலுக்கு சென்றுவிடுவது வழக்கம்.

கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தாலும் வனத்துறை சார்பில் அந்த முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக அடை வைக்கப்பட்டு குஞ்சு பொரிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இந்நிலையில் முதல் நாளான இன்று வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் கடல் ஆமை முட்டையை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். காலையில் கடற்கரையில் வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் கருப்பையா ரோந்து சென்ற போது நான்கு இடங்களில் கடல் ஆமை முட்டையிட்டதை கண்டனர். அதில் இருந்து மொத்தம் 452 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர். எம்.ஆர் சத்திரம் கடற்கரையில் உள்ள ஆமை முட்டை பாதுகாப்பு மையத்தில் சேகரித்த முட்டைகளை குஞ்சு பொரிக்க குழிகளில் வைக்கப்பட்டது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »