Press "Enter" to skip to content

சி ஏ ஏ-வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்… சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் தொடங்கி வைத்தார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் திமுக தோழமைக்கட்சி தலைவர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர்.

சென்னை கொளத்தூரில் வீதி வீதியாக நடந்து சென்ற ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துரைத்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார்.

போராட்டம்

குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், என பல வகைகளில் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டமன்றங்களில் தீர்மானங்கள் கூட நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் உள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் சி ஏஏ வை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் சார்பில் முதற்கட்டமாக பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இப்போது இரண்டாம் கட்டமாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்

இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது என கடந்த வாரம் திமுக தலைமையில் நடைபெற்ற அதன் தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் இன்று சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக முதல் கையெழுத்திட்ட ஸ்டாலின், வீதி வீதியாக சுமார் ஒரு மணி நேரம் நடந்து சென்று பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார். இதேபோல் தமிழகம் முழுவதும் திமுகவினர் கையெழுத்து இயக்கத்தை ஆங்காங்கு தொடங்கியுள்ளனர்.

தலைவர்கள்

சென்னை துறைமுகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அவருடன் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் கலந்துகொண்டார். இதேபோல், சென்னை ஆவடியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். கும்பகோணத்தில் கி.வீரமணியும், விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ.மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனும், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஐ.யூ.எம்.எல். தேசியத்தலைவர் காதர்மைதீனும், மதுரையில் ஜவாஹிருல்லாவும், ஈரோட்டில் கொங்கு ஈஸ்வரனும், நெய்வேலியில் திருமாவளவனும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

ஆர்வம்

தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கம் இன்னும் ஒரு வாரத்திற்கு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. பேருந்துநிலையங்கள், கடை வீதிகள், என மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. முதல் நாளான இன்று, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஊர்களான காயல்பட்டினம், கீழக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரிசையில் நின்று ஆர்வமுடன் ஏராளமானோர் கையெழுத்திட்டு செல்கின்றனர்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »