Press "Enter" to skip to content

வரவு செலவுத் திட்டத்தை பற்றி முழுமையாக படித்து பார்த்து பிறகு கமல்ஹாசன் கருத்து சொல்ல வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: பட்ஜெட் குறித்து கமல்ஹாசனின் கருத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். மிக நீண்ட உரை நிகழ்த்தி பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையையும், சாதனையையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு, எல்ஐசி-யில் மத்திய அரசின் ஒரு பங்கு விற்கப்படுவது என பல அம்சங்கள் இருந்தபோதிலும், பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பட்ஜெட் குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், ‘அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை’ என்று குறிப்பிட்டார். இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் தனியார் வானொலி நிறுவனம் இன்று நடத்திய நம்ம மதுரை நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு பயன் அளிக்கக்கூடியது என்று கூறினார். பட்ஜெட்டை பற்றி முழுமையாக படித்து பார்த்து பிறகு கமலஹாசன் கருத்து சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »