Press "Enter" to skip to content

தீ விபத்து நடந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு: மீனாட்சி கோயிலில் மண்டப சீரமைப்பு பணிகள் அரசு அலட்சியத்தால் முடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் முடிந்தும், அரசின் அலட்சியத்தால் இடிந்த வீரவசந்தராயர் மண்டபம்  புனரமைப்பு பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. தற்போது தாமதமாக நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், விரைவில் பணிகளை துவங்கி முடிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடம்ப வனமாக இருந்து கற்கோட்டையானது மதுரை மீனாட்சி அம்மன் கோயில். உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகும் வாய்ப்பு உருவாகி, கடைசி நேரத்தில் கை நழுவி போனது. அதிசயமே அதிசயிக்கும் ஆயிரம் அற்புதங்கள் நிறைந்த கலைக்கோயில் என்றும் இக்கோயிலை வர்ணிப்பவர்கள் உண்டு. பக்தர்கள் மட்டுமின்றி தினமும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குவிகின்றனர். பிரமாண்ட தோற்றமுடைய இந்த கோயிலில் கடந்த 2018, பிப்.2ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அதிர வைத்தது. 2 ஆண்டுகளாகியும் இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணமும் வெளியிடப்படவில்லை.

இந்த தீ விபத்தில் சுவாமி சன்னதி கிழக்கு ராஜகோபுர வாசல் அருகே வரலாற்று சிறப்பு மிகுந்த வீரவசந்தராயர் மண்டபம் இடிந்தது. ஆயிரம் கால் மண்டபம் அருகே கலைத்தூண்கள் மற்றும் மேற்கூரைகளில் சிதைவு ஏற்பட்டது. அன்றைக்கு மூடப்பட்ட கிழக்கு ராஜகோபுர வாசல் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இடிந்த மண்டபம் மற்றும் சிதைவுகள் 6 மாதங்களில் புனரமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதன் பிறகு மண்டபம் தூண்கள் மற்றும் இடிபாடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. புனரமைப்பு பணிக்காக மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகிலுள்ள குவாரி கல் பயன்படுத்த தொழில்நுட்ப வல்லுனர் குழு ஒப்புதல் அளித்தது. இந்த பணிகள் அனைத்தும் 2018 இறுதியிலேயே முடிந்துவிட்டது. அப்போதே பணிகள் ஆரம்பமாகி இருந்தால் இதற்குள் பணிகள் முடிந்து இருக்கும். ஆனால் எதிர்பார்த்தபடி பணிகள் ஆரம்பமாகவில்லை.

2019ல் கோயில் நிர்வாகத்தினர், “புனரமைப்பு பணிக்கு 1 லட்சம் கனஅடி கற்கள் தேவைப்படுகிறது. அந்த கல் வந்து சேருவதில் தாமதம் ஏற்படுகிறது. கல்லுக்காக காத்திருக்கிறோம்” என்று சாக்குபோக்கு கூறினர். ஆனால் தாமதத்தின் மர்மம், தற்போது அம்பலமாகி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்தான் ரூ.18.10 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிக்கு அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதி வழங்க சுமார் 2 ஆண்டுகளாகி இருக்கிறது. அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட தாமதத்தின் விளைவாக புனரமைப்பு பணி முடங்கியது. இடிக்கப்பட்ட மண்டப பகுதிகள் அதே நிலையில் தரைமட்டமாக கிடக்கின்றன. கோயிலின் 5 கோபுர வாசல்களில் சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியான கிழக்கு ராஜகோபுர வாசல் வழியாக பக்தர்கள் சென்று திரும்ப அனுமதிக்கப்படாமல் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புனரமைப்பு பணி நடைபெறாத நிலையில் 2018, 2019ம் ஆண்டுகளில் சித்திரை திருவிழா நடந்து முடிந்தது. 2020 சித்திரை திருவிழாவுக்குள் வீரவசந்தராயர் மண்டபம் கட்டப்பட்டு, மூடிய நிலையிலுள்ள சுவாமி சன்னதி ராஜகோபுர வாசல் திறக்கப்பட்டுவிடும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 2 மாதங்களில் சித்திரை திருவிழா நெருங்கும் நிலையில் புனரமைப்பு பணிக்கு பூமிபூஜை கூட நடக்கவில்லை. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

குடமுழுக்கு எப்போது?

கோயில் பிரகாரம் மற்றும் கோபுரங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி 2009ல் நடைபெற்ற குடமுழுக்கு 2021ல் நடைபெற வேண்டும். அதன்படி திருப்பணிகள் செய்து முடிக்க ஓராண்டுக்கு மேல் ஆகும். எனவே திருப்பணிகள் எப்போது ஆரம்பமாகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »