Press "Enter" to skip to content

போதிய குடிநீர் திட்டங்கள் இல்லாததால் கோடையில் கடும் குடிநீர் பஞ்சம் தாக்கும் அபாயம்: சிவகங்கை மாவட்ட மக்கள் கவலை

சிவகங்கை: குழாய்களை சரிவர பராமரிக்காததால் சிவகங்கை மாவட்டத்தில் கோடையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. 13 லட்சம் பேரின் தாகம் தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிககை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள், பேரூராட்சிகளில் குளத்து நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குளிப்பது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் குளம் மற்றும் கண்மாய் நீரே பயன்படுத்தப்படும். ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அனைத்து நீர்நிலைகளும் நிறைந்து காணப்படும். நவம்பரில் மழை பெய்வது முடிவடைந்து மீண்டும் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் மட்டுமே மழை தொடங்கும் என்பதால் குளங்கள், கண்மாய்களில் இருக்கும் நீர் ஆறு மாத தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். மாவட்டத்தின் சராசரி மழையளவு 904 மி.மீ. கடந்த 2017ம் ஆண்டில் 976.6 மி.மீ மழை பதிவானது. 2018ம் ஆண்டில் 924.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
2019ம் ஆண்டு 1006.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவைவிட கூடுதலாக 102 மி.மீ மழை பெய்துள்ளது. இருப்பினும் முந்தைய ஆண்டுகளில் நிலவிய கடும் வறட்சி, அதிகப்படியான வெயிலால் குளங்கள், கண்மாய்களில் உள்ள நீர் விரைவாகவே வற்றி வருகிறது. ஏராளமான கண்மாய்கள் முழுமையாக நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. மாவட்டத்தில் கோடைக்காலங்களில் ஆண்டுதோறும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

திருப்பத்தூர், இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்புவனம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக உள்ளன. காளையார்கோவில், சிவகங்கை, இளையான்குடி பகுதிகளில் ஆற்றில் பள்ளம் தோண்டி ஊற்று ஊரும் வரை பல மணி நேரம் காத்திருந்து குடிநீர் எடுக்க வேண்டிய நிலை ஆண்டுதோறும் ஏற்படுகிறது. இதில் போதிய குடிநீரும் கிடைப்பதில்லை. கிராமங்களில் போடப்பட்டுள்ள போர்வெல்கள் ஏராளமானவற்றில் கோடை காலங்களில் நீர் இருப்பதில்லை. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து இடங்களிலும் ஆழ்குழாய்(போர்வெல்) சிறு மின் விசை பம்பு அமைக்கப்படுகிறது. ஒரே தெருவில் இரண்டு, மூன்று ஆழ்குழாய்கள் கூட அமைக்கின்றனர். ஆனால் இந்த நீரை யாரும் குடிநீருக்கு பயன்படுத்த முடியாது. நேரடியாக இந்த நீரை குடிநீராக பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இருப்பினும் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்காமல் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆழ்குழாய்கள் நீர் இல்லாததால் பயன்பாடில்லாமல் உள்ளன. இங்கு காணப்பட்ட மோட்டார்களையும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் கழற்றி சென்றுவிட்டனர். தற்போது காட்சி பொருளாக மட்டுமே இவைகள் உள்ளன.

மாவட்டத்தில் வைகை, காவிரி உள்ளிட்ட மிகப்பெரிய கூட்டுக்குடிநீர் திட்டங்களும், நாட்டாறு, சருகணியாறு மற்றும் கண்மாய்களில் ஆழ்குழாய் அமைத்து அதன்மூலமும் ஏராளமான ஊர்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் திருச்சி அருகே முத்தரசநல்லூர் பகுதியில் இருந்து பல மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. மற்ற திட்டங்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்டத்திற்குள் உள்ள பகுதிகளில் தொடங்கப்பட்ட திட்டங்களாகும். வைகையாற்றில் உள்ள குடிநீர் திட்டம் சிலைமான் தொடங்கி பார்த்திபனூர் மதகு அணை வரை வைகை ஆற்றுக்குள் 120 குடிநீர் திட்டங்கள் மூலம் ஒரு கோடியே 50 லட்சம் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. ஆற்றில் இருந்த நீர்வள ஆதாரங்கள் அனைத்தும் மணல் அள்ளப்பட்டதால் குறைந்துவிட்டது. தற்போது ஆற்றுக்குள் சுமார் 350அடி ஆழத்திற்கும் அதிகமாக போர் போட்டால்தான் நீர் கிடைக்கிறது. சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் தேவைக்கென ஆண்டுதோறும் வைகையில் நீர் திறப்பது கிடையாது.

சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட வைகை பகுதியில் இருந்து பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு பல மாவட்டங்களுக்கு நீர் எடுக்கப்படும் நிலையில், இம்மாவட்டத்திற்கென குடிநீருக்கான பங்கு நீர் திறக்கப்படாததால் அதிகப்படியான நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள திட்டங்களிலும் எடுக்கப்படும் நீரின் அளவு குறைந்து வருகிறது. இதுபோல் நாட்டாறு, சருகணியாறு மற்றும் கண்மாய் பகுதிகளில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளிலும் ஆண்டுதோறும் கோடை காலங்களில் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோடை தொடக்கத்திலேயே கடுமையான வெப்பம் நிலவுவதாலும், ஆண்டுதோறும் சீரான மழை இல்லாததாலும் வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த குடிநீர் திட்டங்கள் மூலம் பெறப்படும் நீரின் அளவு குறைந்து வருகிறது. நீர் பற்றாக்குறையால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படும் நாட்களின் இடைவெளி அதிகரித்துள்ளது. குடிநீர் திட்டங்கள் இல்லாத கிராமத்தினர் அருகாமை கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால் நீரின் தேவை அதிகரித்துள்ளது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் கோடை காலங்களில் தற்போது நீர் கிடைத்து வரும் குடிநீர் திட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 13 லட்சம் மக்களின் நீராதாரத்தை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

நிதி ஒதுக்கீடு இல்லாததால் திட்டப்பணிகள் முடக்கம்

குடிநீர் வடிகால் வாரிய உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது, ‘‘காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் விடுபட்ட ஊர்களை இணைக்க கணக்கெடுப்பு பணி நடந்தது. ஆனால் அதன்பிறகு உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் திட்டப்பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன. மாவட்டம் முழுவதும் குடிநீர் வழங்ககூடிய வகையில் ஒரே திட்டம் இதுவரையில் இல்லை. வைகையில் இருந்து செல்லும் குடிநீர் திட்டங்கள், காவிரி குடிநீர் திட்டம் மூலம் மட்டுமே கூடுலான நகரங்கள், கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்கள் உள்ளன’’ என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »