Press "Enter" to skip to content

நீலகிரியில் பெய்த தொடர் மழையால் மலை காய்கறி உற்பத்தி அதிகரிப்பு: டிசம்பர் மாதம் வரை 50 டன் ஏற்றுமதி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை உள்ளது. சுமார் 60 சதவீதம் விவசாயிகள் தேயிலை தோட்டங்களை வைத்துள்ளனர். மீதமுள்ளவர்களே நீலகிரியில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்கின்றனர். உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, வெள்ளை பூண்டு, மேரக்காய் ஆகியவைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நீலகிரியில் அதிகமாக கேரட் மற்றும் உருளைக்கிழங்கே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இவை மேட்டுப்பாளையம் மற்றும் சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டிற்கு கொண்டுச் செல்லப்படுகிறது. அங்கு ஏலம் விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல், தற்போது விவசாயிகளும் சைனீஷ் வகை காய்கறிகளும் அதிகளவு உற்பத்தி செய்கின்றனர். இந்த காய்கறிகளும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நீலகிரியில் ஜூன் மாதம் துவங்கி மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஒரு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் வடகிழக்கு பருவமழை துவங்கும். இந்த மழை நவம்பர் மாதம் வரை பெய்யும். ஆண்டிற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் மழை கிடைக்கும்.

இதனை வைத்துக் கொண்டு இங்குள்ள விவசாயிகள் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர். அக்டோபர் மாதம் துவங்கி வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் துவக்கம் வரை பெய்தது. இதனால், மாவட்டத்தில் அனைத்து நீரோடைகள், குளங்கள், குட்டைகள் மற்றும் அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. இதனால், அனைத்து பகுதிகளிலும் இம்முறை மலை காய்கறி விளைச்சலே அதிகமாகவே உள்ளது. ஆகஸ்ட் மாதம் பெய்த மழையின்போது, முத்தோரை பாலாடா, இத்தலார், எமரால்டு, கேத்தி பாலாடா, நஞ்சநாடு, கப்பத்தொரை போன்ற மலை காய்கறிகள் அதிகம் பயிரிடும் பகுதிகளில் மழை அதிகமாக பெய்தது. இதனால், சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கேரட், உருளைக்கிழங்கு போன்ற மலை காய்கறிகள் சேதம் அடைந்தன. தண்ணீர் தேங்கி நின்றதாலும், தண்ணீரில் அடித்து வரப்பட்ட மண் மற்றும் மணல் விவசாய நிலங்களில் தேங்கியதாலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. எனினும், தொடர் மழையால் மலைப்பாங்கான பகுதிகளில் கூட இம்முறை விவசாயம் மேற்கொள்வதில் விவசாயிகள் அக்கறை காட்டினர். போதிய மழை, தேவையான அளவு தண்ணீர் கிடைத்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் விவசாய பொருட்களின் உற்பத்தியும் வழக்கத்தை காட்டிலும் இம்முறை அதிகரித்தது. குறிப்பாக, ேகரட் வழக்கத்தை காட்டிலும் உற்பத்தி அதிகரித்தது. பொதுவாக ஜனவரி மாதங்களில் கேரட் உற்பத்தி குறையும். அதன்பின், மே மாதத்தில்தான் மீண்டும் கேரட் கிடைக்கும். ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கேரட்டிற்கு விலை சரியாமல் ஏறுமுகத்திலேயே உள்ளது. கிலோ ஒன்று ரூ.60க்கு மேல்தான் விற்பனையாகிறது.

இதனால், விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்ட நிலையில், தற்போதும் கேரட் உற்பத்தி இருந்து வருகிறது. மேலும், இந்த கேரட் தற்போது சென்னைக்கு நேரடியாக கொண்டுச் செல்லப்படுகிறது. கேரட் பயிரிட்ட விவசாயிகளுக்கு இம்முறை ஜாக்பாட் அடித்ததுபோல், தொடர்ந்து விைல உச்சத்திலேயே உள்ளது. இதுமட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு விலையும் தொடர்ந்து சரியாமல் உள்ளது. உருளைக்கிழங்கும் கிலோ ஒன்று ரூ.45 வரை விற்பனையாகிறது. இதனால், உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேபோல், பீட்ரூட் கிலோ ஒன்று ரூ.30 முதல் 40 வரை கிடைக்கிறது. எப்போதும் விலை குறைந்தே காணப்படும் முட்டைகோஸ், முள்ளங்கி போன்ற காய்கறிகளின் விலையும் இம்முறை அதிகமாகவே காணப்படுகிறது. பீன்ஸ், கிலோ ஒன்று ரூ.80ல் இருந்து இறங்காமல் உள்ளது. வெள்ளை பூண்டு கிலோ ஒன்று ரூ.250 முதல் 300 வரை விலை போகிறது. மேலும், பச்சை பட்டாணி, அவரை போன்றவைகளின் விலையும் குறையாமல் உச்சத்திலேயே உள்ளது. மேலும், தற்போது நீலகிரியில் அதிகளவு உற்பத்தி செய்யப்படும் மேரக்காய்க்கும் நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால், இம்முறை நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சியிலேயே உள்ளனர். ஊட்டி மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை செய்து வரும் ராஜாமுகமது கூறுகையில்: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 6 மாதங்களுக்கு மேல் மழை பெய்ததால், காய்கறி உற்பத்தி அதிகரித்துள்ளது. பொதுவாக ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை காய்கறி வரத்து சற்று குறையும். ஆனால், இம்முறை மழையின் காரணமாக அனைத்து பகுதிகளில் விவசாயிகள் காய்கறி பயிரிட்டுள்ள நிலையில், தொடர்ந்து அதிகளவு காய்கறிகள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளது.

மேலும், இம்முறை அனைத்து காய்கறிகளின் விலையும் குறையாமல் உள்ளது. கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற காய்கறிகளுக்கு விலை குறையாமல் உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் உள்ளது. ேமலும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தொடர்ந்து நீலகிரி காய்கறிகளுக்கு மவுசு அதிகமாகவே உள்ளது. இம்முறை கோடை காலத்தின் போது கூட மலை காய்கறிகளின் உற்பத்தி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார். தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் முன் வரை 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் மூலமும், அவரகளை இயற்கை விவசாயம் செய்யவும் ஊக்கவித்து வருகிறோம். மலைப்பாங்கான பகுதிகளில் கூட காய்கறி விவசாயம் மேற்கொள்ள பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். இதன் மூலம் தற்போது நீலகிரி மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை விவசாயிகளுக்கு உறுதுணையாக அமைந்தது. மழையால் சில இடங்களில் காய்கறி தோட்டங்கள் பாதித்த போதிலும், கடந்த டிசம்பர் மாதம் வரை நீலகிரியில் சுமார் 50 டன் மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.  
மேலும், இம்முறை மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி ஏற்படாமல் தொடர்ந்து சீரான விலையும் கிடைத்து வருகிறது. இதனால், விவசாயிகள் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், வரும் மே மாதத்திற்குள் நீலகிரி மாவட்டத்தில் விவசாயம் மேற்கொள்ளும் நிலப்பரப்பின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது மலை காய்கறி 8 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மேற்கொள்ள வாய்ப்புள்ளது, என்றார்.

அரசு கொள்முதல் மையம் தேவை

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகளை பெரும்பாலும் இடைத்தரகர்களே வாங்கி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதனால், அவர்களே அதிக லாபம் பார்க்கின்றனர். அதேசமயம், அதிகளவு மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்படும் இடங்களான கேத்தி பாலாடா, முத்தோரை பாலாடா, தேனாடுகம்பை போன்ற பகுதிகளில் அரசு கொள்முதல் மையங்கள் அமைத்து, நேரடியாக விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதன் மூலம் இடைத்தரகர்களை ஒழிக்க முடியும். அதேசமயம், விவசாயிகளுக்கு தேவையான மலை காய்கறி கிடைக்கும்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »