Press "Enter" to skip to content

புதர் மண்டிய அரசு மருத்துவ கல்லூரி வளாகம் பாழடைந்த நிலையில் மருத்துவமனை கட்டிடங்கள்: தீ விபத்துகளால் அபாயம் அதிகரிப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் பாழடைந்த நிலையில், புதர் மண்டி கிடக்கும் பழைய கட்டிடங்களை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. பல்வேறு பிரமாண்ட கட்டிடங்களில் மருத்துவக்கல்லூரியும், மருத்துவமனையும் செயல்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரம் நோயாளிகள் வந்து செல்கிறார்கள். 700க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக உள்ளனர். தலா 300 படுக்கை வசதிகள் கொண்ட பொது மருத்துவ கட்டிடமும், கூடுதல் மருத்துவ கட்டிடமும் உள்ளது. ஆசாரிபள்ளத்தில் மருத்துவக்கல்லூரி வருவதற்கு முன் அந்த இடம் டி.பி. மருத்துவமனையாக இருந்தது. அதன் வளாகத்தை சுற்றி மூலிகை மருந்து செடிகள், மரங்கள் உள்ளிட்டவை இருந்தன. பின்னர் மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட தொடக்கத்தில் அங்கிருந்த பழைய கட்டிடங்களில் தான் வகுப்பறைகள் செயல்பட்டன. பின்னர் அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடங்களுக்கு வகுப்பறைகள், லேப் உள்ளிட்டவை மாறின. அதன் பின்னர் பழைய கட்டிடங்கள் எல்லாம் கைவிடப்பட்டன. விலை உயர்ந்த தேக்கு உள்ளிட்ட மரங்களால் ஆன இந்த கட்டிடங்கள் இப்போது புதருக்குள் மூழ்கி கரப்பான் பூச்சிகளுக்கும், பாம்புகளுக்கும் தான் இருப்பிடமாக உள்ளன.

இந்த கட்டிடங்களை முறையாக பராமரித்தால் நீண்ட காலம் பயன்தரும். இப்போது கட்டப்படும் கட்டிடங்கள் எல்லாம் கட்டிய சில வருடங்களில் இடிந்து விழுகிறது. சில கட்டிடங்கள் கட்டும் போதே விழுந்து விடுகின்றன. ஆனால் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் எல்லாம் புதருக்குள் மூழ்கி கிடந்தாலும் இன்னும் அதன் கம்பீரத்தை இழக்க வில்லை. பல கட்டிடங்களின் மேற்கூரைகள், தூண்கள் எல்லாம் முழுபலத்தோடு அப்படியே இன்னும் காட்சி அளிப்பதை காண முடிகிறது. பாரம்பரியமிக்க இந்த கட்டிடங்களை எல்லாம் முறையாக பராமரிக்க வேண்டும் என்று பல தரப்பில் கோரிக்கை விடுத்தாலும் கூட இன்னும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. மாவட்ட கலெக்டராக நாகராஜன் இருந்த சமயத்தில் பழைய கட்டிடங்கள் பயனற்ற நிலையில் இருந்தால் அவற்றை பொதுப்பணித்துறை மூலம் முறைப்படி டெண்டர் விட்டு இடிக்கலாம். பின்னர் தேவைப்படும் நேரங்களில் புதிய கட்டிடங்கள் கட்டி கொள்ளலாம் என்றார். ஆனால் அவர் மாறுதலாகி சென்றதால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. பல வருடங்களாக பழைய கட்டிடங்கள் பாம்புகள், கரையான்களுக்கு மட்டுமில்லாமல் சில சமூக விரோத கும்பல்களுக்கும் புகலிடமாகி உள்ளன. மருத்துவக்கல்லூரியில் கட்டண சிகிச்சை வார்டு, கைதிகளுக்கான தனி சிகிச்சை வார்டு உள்ளிட்ட பல பிரிவுகள் இல்லை. இது தவிர தற்போது இருக்கும் சிகிச்சை வார்டுகளிலும் இட நெருக்கடி உள்ளது.

எனவே பழைய கட்டிடங்களை எல்லாம் புதுப்பித்து அத்தியாவசிய தேவை கருதி கூடுதல் சிகிச்சை வார்டுகள், புதிய சிகிச்சை வார்டுகள் உள்ளிட்டவற்றை தொடங்கலாம் என்பது கோரிக்கை ஆகும். கட்டண சிகிச்சை வார்டுகள் உள்ளிட்டவை தொடங்கப்படும் பட்சத்தில் கூடுதல் நோயாளிகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருவார்கள். அதன் மூலம் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துக்கு வருமானமும் கிடைக்கும். ஆனால் சிலர், இங்கு கட்டண சிகிச்சை வார்டு உள்ளிட்டவை வருவதை உள் நோக்கத்துடன் தடை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள பழைய கட்டிடங்கள் பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிலையில் உள்ளன. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் தலையிட்டு பழைய கட்டிடங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் வேண்டுகோள் ஆகும். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை மருத்துவ தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. எனவே மருத்துவக்கல்லூரிக்கு கட்டிட தேவைகள் அதிகமாகவே இருக்கிறது. எனவே புதர் மண்டிய நிலையில் கிடக்கும் இந்த கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். புதர் மண்டி கிடப்பதால் உள் நோயாளிகள் பிரிவில் தங்கி இருப்பவர்களும் சில சமயங்கள் பேரதிர்ச்சி அடையும் வகையில் விஷ பூச்சிகள் படையெடுக்கின்றன. சில சமயங்களில் தீ விபத்துக்கள் நடக்கின்றன. கடந்த வாரம் பழைய  கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மருந்து அட்டைகள் வைத்திருந்த கட்டிடத்தில் தீ பிடித்தது. இதில் அந்த கட்டிடம் இடிந்தது. எனவே விபரீதங்கள் நிகழ்வதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய கட்டிடங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கை ஆகும்.  

பயன் உள்ள வகையில் பயன்படுத்த வேண்டும்

முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலன் கருதி கடந்த 2012 ல், குமரி மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் 5 ஏக்கர் இடம் அளிக்க முடியாது என தமிழக அரசு அறிவித்ததால், இஎஸ்ஐ மருத்துவமனை திட்டம் நிறைவேறவில்லை. இதனால்  தனியார் மருத்துவமனைகளுக்கு தொழிலாளர்கள் செல்கிறார்கள். கேன்சர் நோயால் ஏராளமானவர்கள் பாதிக்கிறார்கள். கேன்சர் சிகிச்சை மையம் இல்லை. இருதய நோயாளிகளுக்கு தனி மருத்துவ பிரிவு உருவாக்கப்படும் என்று 2010ல் நாகர்கோவிலில் நடந்த முப்பெரும் விழாவில், அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் ஆட்சி மாற்றம் வந்த பின் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மருத்துவக்கல்லூரியில் போதுமான இடம் இருக்கிறது.  எனவே மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பாழடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றி விட்டு, பயன் உள்ள வகையில் அந்த இடங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »