Press "Enter" to skip to content

புதுச்சேரியிலிருந்து திண்டிவனத்துக்கு புதிய இருப்பு பாதை அமைக்கப்படுமா?… தொடர் வண்டிசேவையில் புதுவை புறக்கணிப்பு: பல்வேறு பகுதிகளுக்கு ரயில்களை இயக்க வலியுறுத்தல்

புதுச்சேரி ரயில் நிலையம் கடந்த 15.12.1879ம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது 141வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பழமையான ரயில் நிலையமாகும். புதுவையிலிருந்து மங்களூர், மும்பை, தாதர், யஷ்வந்த்பூர் (கர்நாடகா), புவனேஸ்வர் (ஒரிசா), ஹவுரா (மேற்கு வங்காளம்), புதுடெல்லி, கன்னியாகுமரி, சென்னை மற்றும் திருப்பதி ஆகிய 9 நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை ரயில் மட்டும்தான் தினமும் இயக்கப்படுகிறது. மீதி அனைத்துமே வாராந்திர ரயில்கள், அதுவும் தாதர் (மும்பை) எக்ஸ்பிரஸ் மட்டும்தான் வாரம் 3 முறை இயக்கப்படுகிறது. மற்ற ரயில்கள் அனைத்தும் வாரம் ஒரு முறைதான் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை மற்றும் திருப்பதிக்கு தினசரி பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது இல்லாமல் தினமும் மூன்று முறை விழுப்புரத்திற்கு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. புதுவையில் மொத்த ரயில்களே இவ்வளவுதான். தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் புதுவையிலிருந்து புறப்படும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படாமல் உள்ளது. இந்த நிலையத்தை ஏ கிளாஸாக மாற்றினால் எஸ்கிலேட்டர் (நகரும் படிகட்டு), மேற்கூரையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். அதற்கான நடவடிக்கையை இதுவரை எடுக்கப்படவில்லை.

புதுவையில் ரயில் சேவை என்பது குறிப்பிடும்படி இல்லை. காலை 5.35 மணிக்கு விழுப்புரம் வழியாக முதல் பாசஞ்சர் சென்னை செல்கிறது. பின்னர், காலை 8.10 மணிக்கு 2வது பாசஞ்சர் விழுப்புரம் செல்கிறது. அதன் பிறகு மதியம் 1.50 மணிக்கு விழுப்புரம் வழியாக திருப்பதி பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. தொடர்ந்து, மாலை 3.35 மணிக்கு சென்னை பாசஞ்சர் ரயிலும், மாலை 4 மணிக்கு விழுப்புரம் பாசஞ்சர் ரயிலும், இரவு 7.35 மணிக்கு விழுப்புரம் பாசஞ்சர் ரயிலும் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்தில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மத்திய அரசும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் பல மாநிலங்களுக்கு புதிய ரயில் கட்டணத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், புதுவையை மட்டும் புறக்கணித்து வருகிறது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர், கடந்த டிசம்பரில் முன்னும் பின்னும் இன்ஜின் வசதி கொண்ட மெமூ ரயில் இயக்கம் புதுவை – சென்னைக்கு இடையே தொடங்கப்பட்டது. தற்போது, புதுச்சேரி – விழுப்புரம், புதுச்சேரி – திருப்பதி செல்லும் ரயில்களும் மெமூ இன்ஜின் வசதி கொண்ட ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வே ஊழியர்களின் உழைப்பும், நேரமும் மிச்சமாகியுள்ளது. இதனால் ரயிலை எளிதாக இயக்க முடியும். எனவே, புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மெமூ ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 2013ல் தொடங்கப்பட்ட புதுச்சேரி – கன்னியாகுமரி வாரம் ஒரு நாள் சேவை தினமும் கார்டு லைனில் இயக்க வேண்டும். அதற்கு பதிலாக கன்னியாகுமரி ரயில் இயக்கப்பட்ட மெயின் லைனில் புதுச்சேரி – ராமேஸ்வரம் புதிய ரயில் சேவையை துவக்க வேண்டும். காக்கி நாடா – செங்கல்பட்டு ரயில் சேவையை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும். விழுப்புரம் – மதுரை பயணிகள் ரயிலை விரைவு பயணிகள் ரயிலாக மாற்றி புதுவையிலிருந்து இயக்க வேண்டும். விழுப்புரத்திலிருந்து புருலியா, கோரக்பூர் போன்ற வடமாநிலங்களுக்கு செல்லும் வாராந்திர ரயில்களை புதுவையில் இருந்து இயக்க வேண்டும். அதேபோல், விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயிலை புதுவையிலிருந்து இயக்க வேண்டும்.
ரயில் பணிமனை மற்றும் பராமரிப்பு பணிக்காக ஆர்டிஓ அலுவலகம் அருகே இடம் இல்லையெனில், ரயில் நிலையம் தாண்டி துறைமுக பகுதியிலோ அல்லது காலியாக வேலை இல்லாமல் இருக்கும் ஏஎப்டி அலுவலக பகுதிகளிலோ இவற்றை அமைப்பதற்கு புதுவையில் உள்ள அரசியல் கட்சியினரும், வர்த்தக சபை மற்றும் வணிகர்கள் கூட்டமைப்பினரும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும். புதுவையிலிலேயே பணிமனை மற்றும் பராமரிப்பு இடம் அமைந்தால் புதுவையிலிருந்து ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் சுலபமாகவும், விரைவாகவும் செல்ல வழிவகை செய்ய முடியும். இத்திட்டத்தையெல்லாம் மத்திய அரசிடமிருந்து கொண்டுவர திருச்சி ரயில்வே கோட்டம் மற்றும் தென்னக ரயில்வே நிர்வாகமும் முயற்சி எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »