Press "Enter" to skip to content

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தென்காசியில் 285 பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணை வழங்கல்

தென்காசி: தென்காசியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தென்காசி நகராட்சி, பேரூராட்சிகள் மேலகரம், இலஞ்சி, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 285 பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் ஆணை  வழங்கும் விழா நடந்தது. மேலகரம் சமுதாய நலக்கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்தார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளர் மாடசாமி  வரவேற்றார்.விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி 285 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கி பேசியதாவது,

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய நகராட்சி பகுதிகளில் 6092 வீடுகள் ரூ.182.76 கோடி மதிப்பீட்டில் கட்ட ஒப்புதல்  பெறப்பட்டு 700 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 1838 வீடுகள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் தென்காசி நகராட்சி இலஞ்சி, மேலகரம், சுரண்டை பேரூராட்சி பகுதிகளில் 285 வீடுகள் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் மத்திய,  மாநில அரசுகளின் ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

விழாவில் குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர்கள் ஈஸ்வரி, ரீட்டா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரம், அரசு வழக்கறிஞர் மேலகரம் கார்த்திக்குமார், நிலவள வங்கி தலைவர்  சங்கரபாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர்மயில் வேலன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் நெல்லை முகிலன், தென்காசி நகர செயலாளர் சுடலை, வெள்ளகால் ரமேஷ், அகமது ஷா, அன்னம ராஜா, அரசு வழக்கறிஞர்  சின்னத்துரை, குற்றாலம் சுரேஷ்,சாமிநாதன்,அமல்ராஜ், பெரியபிள்ளைவலசை முன்னாள் செயலாளர் வேம்பு என்ற ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »