Press "Enter" to skip to content

ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி ஊராட்சியில் ரூ.2.18 கோடியில் வளர்ச்சி பணிகள்: அமைச்சர் ஆய்வு

ஆரணி; ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி ஊராட்சியில் மிஷன் அந்தியோதயா திட்டத்தின் கீழ் ரூ.2.18 கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி ஊராட்சியில் மத்திய அரசின் மிஷன் அந்தியோதயா திட்டத்தின் கீழ் சாலை பாராமரிப்பு, மின்சார வசதிகள், கிராம குடியிருப்பு மேம்பாடு போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள்  மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த ஆண்டு சிறந்த ஊராட்சியாக  இந்திய அளவில் மொழுகம்பூண்டி ஊராட்சி முதலிடம்  பிடித்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இந்த ஊராட்சியில் கூடுதல் வசதிகள் செய்து தருவது தொடர்பாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து மொழுகம்பூண்டி ஊராட்சிக்கு ₹2.18  கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 அதன்படி 29 தெருக்களுக்கு சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதிகள், பள்ளி கட்டிடம், நூலக கட்டிடம், இ-சேவை மையம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி புனரமைப்பு, பேருந்து நிறுத்த நிழற்கூடம், பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு  மைதானம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த, பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பிடிஓ திலகவதி, உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி  பொறியாளர் மதுசூதனன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »