Press "Enter" to skip to content

நள்ளிரவில் பயணிகளை இறக்கி விட்டு பார்சலை ஏற்றிச்சென்ற அரசு பேருந்து: விழுப்புரம் கோட்ட அலுவலகத்தில் புகார்

விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து, திருப்பதிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இரவு 10 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை, வேலூர், சித்தூர் வழியாக அதிகாலையில் திருப்பதிக்கு சென்றடைகிறது. தினசரி இப்பேருந்தில் பயணிகள் செல்கின்றனர். குறிப்பாக சனிக்கிழமைக்கு முந்தைய நாட்களில் இப்பேருந்துகளில் பயணிகள் கூட்டம்அதிகமாக இருக்கும். திருப்பதிக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் விழுப்புரத்திலேயே புல்லாகிவிடும். அடுத்து திருவண்ணாமலை, வேலூரிலும் பயணிகள் ஏறிச்செல்வார்கள். விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படும் இப்பேருந்தில் பின்பக்க இருக்கை முழுவதும் பார்சல்கள் ஏற்றப்பட்டுச் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. விழுப்புரத்திலிருந்து பின்பக்க இருக்கைகளை காலியாக வைத்துக்கொண்டு, திருவண்ணாமலையிலிருந்து தினமும் திருப்பதிக்கு பார்சல்களை கொண்டு செல்கிறார்களாம்.

நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு விழுப்புரத்திலிருந்து புறப்பட்ட இப்பேருந்து திருவண்ணாமலை பேருந்து நிலையம் (இரவு 11.30 மணியளவில்) சென்றதும் காலியாக இருந்தபின்பக்க இருக்கையில் பயணிகள் பலர் முண்டியடித்துக்கொண்டு ஏறி உட்கார்ந்துள்ளனர். ஆனால் நடத்துனரோ அந்த சீட் புல்லாகிவிட்டதாக கூறி இறக்கிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் பண்டல், பண்டலாக பார்சல் ஏற்றப்பட்டு பயணிகள் இருக்கையில் வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஓட்டுநர் பேருந்தை எடுத்துச்சென்றார். இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த பயணி அம்ஜத் என்பவர் விழுப்புரம் கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், நள்ளிரவு பேருந்து வசதியில்லாத நிலையில் பயணிகளை தவிக்கவிட்டு பார்சல்களை ஏற்றிச்செல்கிறார்கள். ரூ.3 ஆயிரம் பணத்திற்கு ஆசைப்பட்டு எங்களை பேருந்து நிலையத்திலேயே தவிக்கவிட்டுச் சென்ற நடத்துனர், ஓட்டுநர்மீது நடவடிக்ைக எடுக்கவேண்டும். தினசரி இப்பேருந்தில் திருப்பதிக்கு பார்சல் செல்கிறது. பயணிகளுக்காக இயக்கப்படும் பேருந்து பார்சல் பேருந்தாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »