Press "Enter" to skip to content

சோனியாகாந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் வட்டாரத்தில் அவருக்கு சாதாரண காய்ச்சல் தான் என கூறப்பட்டாலும் அவரது உடல்நிலை குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஏற்கனவே இடது தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கும் சோனியா, கடந்த ஒரு வருடகாலமாகவே பல்வேறு உடல் உபாதைகளால் அவஸ்தை பட்டு வந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்ட சோனியா, அதன்பின்னர் முழு ஓய்வில் இருந்து வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு மீண்டு காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை சோனியாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவசரமாக கங்காராம் மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் காட்டுத்தீயாக இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுக்கு பரவியது. மேலும், அவரது உடல்நிலை குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு அலைபேசி மூலம் தொடர்ந்து நலம் விசாரிப்புகள் வந்ததை அடுத்து, சோனியாவுக்கு சாதாரண காய்ச்சல் எனக் கூறப்பட்டது.

காங்கிரஸ் தரப்பில் இருந்து காய்ச்சல் என கூறப்பட்டாலும் சோனியாவின் உடல்நிலை குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே வழக்கமான உடல்நிலை பரிசோதனை தான் இதில் அச்சப்பட ஒன்றுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுகிறது. இன்னும் சற்று நேரத்தில் மருத்துவமனை தரப்பில் இருந்து சோனியாகாந்தி உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிகிறது. சோனியாகாந்தி முன்பை போல் செயல்பட முடியாமல் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலப் பாதிப்பின் காரணமாகவும் கட்சிப்பணிகளை கூட தவிர்த்து அண்மைக்காலமாக ஓய்வில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »