Press "Enter" to skip to content

சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய தயக்கம் சர்வதேச சந்தையில் ஓசூர் ரோஜாவுக்கு மவுசு: காதலர் தினத்தில் ஏற்றுமதி இரட்டிப்பாகும் வாய்ப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில், பல்வேறு வகையான காய்கறிகளுடன் ரோஜா, சாமந்தி, கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட அலங்கார மலர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த மலர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகி றது. குறிப்பாக காதலர் தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது அதிகளவில் ஏற்றுமதி ஆகிறது. வரும் 14ம் தேதி காதலர் தினம் வருவதால் ஓசூர் ரோஜாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து ஓசூர் ரோஜா மலர் ஏற்றுமதியாளர் ஹரிஷ் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு விழாக்களில் பயன்படுத்தப்படக்கூடிய ரோஜா மலர்களில் 75 சதவீத அளவிற்கு ஓசூர் பகுதியில் இருந்து தான் அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பகுதியில் ரோஜா உற்பத்திக்காக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பசுமை குடில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் பெங்களூரு, புனே, நாசிக் உள்ளிட்ட பகுதிகளிலும் ரோஜா உற்பத்தி செய்யப்படுகிறது. ஓசூர் பகுதியில்  தாஜ்மஹால், கிராண்ட்காலா, வெள்ளை, மஞ்சள், சிகப்பு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகையான ரோஜாக்கள்  உற்பத்தியாகிறது. காதலர் தினம் நெருங்குவதால் உள்நாட்டு சந்தை மற்றும் சர்வதேச சந்தையில் ஓசூர் ரோஜாக்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏற்றுமதி ரக ரோஜா ஒன்று உள்ளூர் சந்தைகளில் ரூ.10 முதல் ரூ.12 வரையிலும், சர்வதேச சந்தையில் ரூ.12 முதல் ரூ.15 வரையிலும் விற்பனை செய்யக்கூடிய வாய்ப்புள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கிருந்து ரோஜா மலர்களை கொள்முதல் செய்ய மத்திய கிழக்கு ஆசிய நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இதனால், இந்தியாவிலிருந்து அந்த நாடுகள் அதிகளவில் மலர்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. தற்போது, சிங்கப்பூர் மற்றும் மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அதிகப்படியான மலர்,காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காதலர் தினத்தையொட்டி மலர் ஏற்றுமதி இரட்டிப்பாகும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »