Press "Enter" to skip to content

உதகையில் 7.5 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான செயற்கை ஓடுதள பணிகள்: மந்த கதியில் இருப்பதாக விளையாட்டு வீரர்கள் குற்றசாட்டு

நீலகிரி:  உதகையில் 7.5 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான செயற்கை ஓடுதளத்துடன் மலைமேலிட பயிற்சி மைய பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று விளையாட்டு வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு வீரர்கள் சமவெளி பகுதியில் உள்ள தட்பவெட்ப நிலையில் பயிற்சி செய்வது போலவே,  மலை பிரதேசத்தில் உள்ள கால நிலைகளிலும் பயிற்சி செய்ய ஏதுவாக,  தமிழக அரசு கடந்த 2014ம் ஆண்டு உதகையில் மலை மேலிட பயிற்சி மையம் அமைக்க முடிவெடுத்தது. அதற்காக உதகையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திறன் திறந்தவெளி மைதானம் தேர்வு செய்யப்பட்டது. 400 மீட்டர் ஓடுதளம், கால்பந்து, கைப்பந்து, டெனிஸ் உள்ளிட்ட மைதானங்களும், 2000 பேர் அமரும் வசதிகொண்ட மைதானத்தில், அதற்கான பணிகளை மேற்கொள்ள ரூபாய் 7.5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு, கடந்த 2015ம் ஆண்டு அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன.

குறிப்பாக சர்வதேச தரத்திலான செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் விடுதிகள் கட்டும் பணியும் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த பணிகள் மந்த கதியில் நடைபெற்று கொண்டிருப்பதாக பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 5 ஆண்டுகள் ஆகியும் பணிகள் நிறைவடையாத நிலையில் மைதானத்தில் பயிற்சி பெற முடியவில்லையென, தடகள மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். செயற்கை ஓடுதளம், தங்கும் விடுதிகள் தற்போது அமைக்கப்பட்ட நிலையில் கால்பந்து மைதான பணிகள் முடிவடையாததால், மாவட்ட அளவிலான போட்டிகள் மற்றும் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்ட விளையாட்டு வீரர்களின் திறமை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பயிற்சியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த மைதானத்தில் பயிற்சி பெற்றதில் நீலகிரியை சேர்ந்த 10 பேர் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர். இந்த நிலையில் மலை மேலிட பயிற்சி பணிகள் முடிந்து திறக்கப்பட்டால், மேலும் பல வீரர்கள் நாட்டிற்காக விளையாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »