Press "Enter" to skip to content

மத்திய வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்துள்ள 27 ஆயிரம் கி.மீ தொடர்வண்டித் துறை மின்மயத் திட்டம் படிப்படியாக நிறைவேற்றினால் மட்டுமே பலன் தரும்: டிஆர்இயூ கருத்து

மன்னார்குடி: 2020- 21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று முன்தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் ரயில்வே துறையில் 27ஆயிரம் கி.மீ ரயில்வே பாதைகள் மின் மயமாக்கப்படும் என்றும், ரயில்வே காலி இடங்களில் சூர்ய மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இது சாத்தியமா, இந்த திட்டங்கள் ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு உதவுமா? வெறும் அறிவிப்பு திட்டமாக மட்டும் இருக்குமா என ரயில்வே தொழிற்சங்கங்கள் இடையே குழப்பங்கள் நிலவுகிறது. இதுகுறித்து, தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில துணைப்பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், கடந்த 2018 மார்ச் முடிய 30,212 கி.மீ தூரம் மின்மயக்கப் பட்டு உள்ளது. நடப்பு 2019-20ம் நிதியாண்டு 7ஆயிரம் கி.மீ பாதைகளில் மின்மயமாக்கும் பணி நடந்து வருகிறது.

மீதமுள்ள பாதைகள் மின்மயமாக்க தற்போது பட்ஜெட் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாக மின்சார இன்ஜின்கள் கையாண்டால் சரக்கு ரயில்களுக்கு 47 சதவீதமும், பயணிகள் ரயில்களுக்கு 50 சதவீதமும் இழுவை செலவு குறையும். இதனால் மின்சார இன்ஜின்களை மட்டுமே இயக்கி ஆண்டுக்கு 2800 மில்லியன் லிட்டர் டீசலையும், எரிபொருள் செலவில் ரூ 13 ஆயிரம் கோடியும் மிச்சப்படுத்தும் நோக்கத்தில் அனைத்து பாதைகளையும் மின்மயமாக்க முடிவு எடுத்து இருக்கிறது. புழக்கத்தில் உள்ள 5868 டீசல் இன்ஜின்களை மின்சார இன்ஜின்களாக மாற்ற வேண்டும். உலகில் எந்த நாடும் டீசல் இன்ஜின்களை மின்சார இன்ஜின்களாக மாற்றி இயக்கியது இல்லை. இருப்பினும் இந்தியா இன்ஜினை மாற்றும் முயற்சியில் வெற்றி கண்டது. ஆனால் அதை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. 2018-19ம் நிதியாண்டு 100 டீசல் இன்ஜின்களை மின்சார இன்ஜின்களாக மாற்றும் திட்டம் இலக்கை இதுவரை அடைய வில்லை.

மின்சார பாதைகளில் மின்சார இன்ஜின்கள் இயக்க புழக்கத்தில் உள்ள ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான டீசல் இன்ஜின்களை கைவிட வேண்டும். அல்லது விற்பனை செய்தாக வேண்டும். இதனால் ஏற்படும் நஷ்டத்தோடு, புதிய மின்சார இன்ஜின்கள் வாங்க ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவும் செய்ய நேரிடும். இல்லையென்றால் மின்பாதைகளை அமைத்து விட்டு டீசல் இன்ஜின்கள் இயக்கும் சூழலே உருவாகும். 27 ஆயிரம் கி.மீ ரயில்வே மின்மயத் திட்டத்தில் பெரும் மூலதனம் பலனின்றி முடங்கும். மின்மயத் திட்டங்கள் படிப்படியாகத் தான் நிறைவேற்ற வேண்டும். வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்திவிட்டு வரி விலக்குக்கான 70 வித கழிவுகளை நீக்கியது அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவில் பலன் தராது. பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெற்ற ரயில்வே காலி இடங்களில் சூரிய மின்சாரத் திட்டம் மட்டுமே வரவேற்கத்தக்கது. இவ்வாறு மனோகரன் கூறினார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »