Press "Enter" to skip to content

உயரம் குறைவு, சீரமைக்காததால் சேத்தியாத்தோப்பு பரவனாற்று பாலத்தில் தொடரும் உயிர்பலி: கண்டும், காணாமல் இருக்கும் அதிகாரிகள்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு  அருகே பரவனாற்று பாலத்தின் அவலநிலையால் அடிக்கடி விபத்து ஏற்படும் அவலம் நீடித்து வருகிறது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு பரவனாற்று பாலம் அமைந்துள்ளது. சென்னை- கும்பகோணம் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள  இப்பாலம் முக்கியத்துவம் வாய்ந்த பாலம் ஆகும். கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பகுதிகளை இணைக்கும் பாலமாகவும் இருந்து வருகிறது. இப்பாலத்தின் வழியாக தினசரி ஆயிரக்கணக்கில் சிறியதும், பெரியதுமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில்  பாலத்தின் உறுதித்தன்மையானது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

பரவனாற்று  பாலம் மிக குறுகியதாக இருந்து வருவதால் பாலத்தில் இதுவரை நூற்றுக்கணகில்  விபத்துக்களும், அதனால் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இப்பாலம் தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோதே இதனை செப்பனிட்டு அல்லது புதிய பாலமாகவோ அமைக்க வேண்டும்  என வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் இப்பாலம் புதியதாக  மாற்றியமைக்கப்படாமல் இன்னமும் பழையதாக வலுவிழந்துதான் உள்ளது. இப்பாலத்தின் தன்மைக்கு உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற விபத்தை சொல்லலாம். சில நாட்களுக்கு முன்பு இப்பாலத்தின் வழியாக கடக்க முயன்ற போர்வெல் போடும் இயந்திர வாகனம் பாலத்தின் சுவற்றில் மோதி அப்படியே பரவனாற்றுக்குள் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போதைய நிலையில் பாலத்தின் தடுப்புச்சுவர்கள் உயரம்குறைவாகவும், சில இடத்தில் பாலத்தின் தடுப்புச்சுவர்கள் இல்லாமலும்  இருந்து வருகிறது. இதில் தற்போது போக்குவரத்து நடைபெற்றுதான்  வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும்போது தற்போது பாலத்தின்  வழியாக விக்கிரவாண்டி- தஞ்சை நான்குவழிச்சாலைப் பணிக்கான பணிகளை ஆட்கள்  செய்து வருகிறார்கள். ஆனால் குறுகியதாக இருக்கும் இப்பாலத்தினை தரமானதாக  மாற்றியமைக்கவில்லை. அல்லது குறைந்தபட்சமாக விபத்து ஏற்படாமல்  பாதுகாக்க  அதிகாரிகள் தவறிவிட்டனர். உடனடியாக செய்ய வேண்டியதெல்லாம் அதிகாரிகள்  பரவனாற்று பாலத்தினை புதியதாக மாற்றியமைக்க வேண்டும். அல்லது பழுதுபார்த்து  விபத்து இல்லாமல் இதனை கடக்க உதவவேண்டும் என அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »