Press "Enter" to skip to content

கான்டூர் கால்வாயில் விழுந்த காட்டு யானை, காளைமாடு மீட்பு

உடுமலை: பிஏபி பாசனத்திட்டத்தில் சர்க்கார்பதி பவர்ஹவுசிலிருந்து 49 கி.மீ தொலைவில் உள்ள திருமூர்த்தி அணையை நிரப்ப கான்டூர் கால்வாய் வழியே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. உடுமலை வனரசகத்திற்குள்ளாக  அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக கால்வாய் வருவதால் அவ்வப்போது இதில் வனவிலங்குகள் தாகம் தணிப்பதற்காக இறங்குவது வழக்கம். தற்போது திருமூர்த்தி அணைக்கு கான்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவில் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று கான்டூர் கால்வாயில் தண்ணீர் குடிக்க முயன்ற போது கால்வாயில் தவறி விழுந்துள்ளது. நீரின் வேகம் அதிகளவில் இருக்கவே யானை சுமார் 10 கி.மீ தொலைவிற்கு கால்வாயில் அடித்து வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை வனசரகர் தனபாலன், வனவர் தங்கபிரகாஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று யானையை காப்பாற்றுவதற்காக கால்வாயிற்குள் மரத்தடிகளை போட்டு தடுப்பு ஏற்படுத்தினர். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட காட்டு யானை மரத்தடியை பிடித்து நிற்கவே, வனத்துறை ஊழியர்கள் பேட்டரி லைட் அடித்து யானை கரையேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து யானை தட்டுத்தடுமாறி கால்வாயை ஒட்டி அமைந்திருந்த பாறையில் ஏறி உயிர்பிைழத்தது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

நாட்டுமாடு மீட்பு:
விவசாயிகள் தங்களது மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அனுப்புவது வழக்கம்.நேற்றிரவு அணையில் இருந்து 39 கி.மீ தொலைவில் 3 வயது காளை மாடு ஒன்று கால்வாயில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து வரப்பட்டது. மலைவாழ் மக்கள் மூலம் தகவல் அறிந்த வனத்துறையினர் கால்வாயில் அடித்து வரப்பட்ட காளை மாட்டை பின்தொடர்ந்து கயிறு போட்டு அதனை கட்டினர். பின்னர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து காளையின் கழுத்தில் கயிற்றை கட்டி பாதுகாப்பாக அணை நோக்கி கால்வாய் வழியாகவே அழைத்து நீரோட்டத்திற்கு ஏற்பவாறு வழிநடத்தி வந்தனர். காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கால்வாய் கரையோரமாக காளையை அழைத்து வந்து அணைக்குள் அடித்து செல்லப்பட்ட காளையை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »