Press "Enter" to skip to content

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம்- 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த 11 வயது சிறுமியை அந்த குடியிருப்பில் பணியாற்றிய லிப்ட் ஆபரேட்டர் உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், சுரேஷ், ராஜசேகர், எரால்பிராஸ், அபிஷேக், சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பாபு, பழனி, தீனதயாளன், ராஜா, சூர்யா, குணசேகரன், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேரை கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை, காயம் ஏற்படுத்துதல், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

17 பேர் மீதான குண்டர் சட்டத்தை 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி ஐகோர்ட்டு ரத்து செய்தது. ஆனால் 17 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படாததால் தொடர்ந்து கடந்த ஒன்றரை வருடமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ் நியமிக்கப்பட்டு, சிறப்பு கோர்ட்டு நீதிபதி மஞ்சுளா முன்பு வழக்கு விசாரணை நடந்தது. கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை 11 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், 36 அரசு தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். மீதமுள்ள 16 பேருக்கு எதிரான வழக்கில் கடந்த 1-ந்தேதி நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு வழங்கினார்.

குற்றம் சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விவரம் 3-ந்தேதி (இன்று) அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி கூறி இருந்தார். அதன்படி குற்றவாளிகளுக்கான தண்டனை இன்று அறிவிக்கக்கப்பட்டது.

அதில் ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் 3வது குற்றவாளியான ராஜசேகருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »