Press "Enter" to skip to content

புதுகை நாட்டு கோழிகளுக்கு வெளி மாவட்டங்களில் கிராக்கி: ஏற்றுமதியும் நாளுக்கு நாள் அதிகரிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்க்கப்படும் நாட்டுகோழிகளுக்கு வெளி மாவட்டங்களில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் ஏற்றுமதியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள 497 பஞ்சாயத்துகளில் உள்ள குக்கிரமங்களில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் காலம் கடந்து பெய்யும் மழை, ஆறுகளிலும் குறித்த நேரத்தில் தண்ணீர் வராததன் காரணமாக விவசாயம் நாளுக்கு நாள் குறைய தொடங்கியதால் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு கால்நடை வளர்ப்பும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிகம் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு பொருட்செலவு குறைவு என்பதால் விவசாயிகள் இத்தொழிலிலும் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டுக்கோழி குஞ்சுகளை வாங்கி விட்டுவிட்டாலேபோதும். அது வீட்டருகே உள்ள தீவணங்களை சாப்பிட்டாலே போதுமானதாக அமையும். பெரிய அளவில் அதற்காக நாம் மெனக்கட தேவையில்லை. இதேபோல் இரவு நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் கோழிகளை பிடித்து அடைத்து வைக்க தேவையில்லை. வீட்டின் அருகே உள்ள மரங்களில் தானாகவே வந்து அடைந்துவிடும். இதனால் வீட்டில் உள்ளவர்களக்கு எந்த பிரச்னையும், வேலையும் இல்லை. மரங்களில் அடையும் கோழிகளுக்கு எந்தவித நோய்களும் வராது. இதனால் கிராமங்களில் ஏழை, பணக்கார் என அனைத்து வீடுகளிலும் நாட்டுகோழிகள் வளர்ப்பு கண்டிப்பாக இருக்கும். உடலுக்கு அதிக சத்தான மாமிச வகைகளில் முதலிடம் வகிப்பது நாட்டுக்கோழிதான்.
திருமணம் முடிந்த புதுமண தம்பதிகளுக்கு இதனை அதிகம் சமைத்து கொடுப்பார்கள். மேலும், நாட்டுக்கோழி முட்டையை குழந்தைகளுக்கு கொடுத்தால் உடலுக்கு அதிக ஆரோக்கியம்.

மேலும், புதிதாக பூப்பெய்த பெண்களுக்கும் நாட்டுக்கோழி முட்டையைதான் அதிகம் கொடுப்பார்கள். இதனால் சந்தையில் இதன் மதிப்பே தனிதான்.
இப்படி வளர்க்கப்படும் கோழிகளை கிராமத்தினர் தேவையானவற்றை வீட்டிற்கு வைத்துகொண்டு சில கோழிகளை வியாபாரிகளிடம் விற்பனை செய்து விடுகிறார்கள். கிராமங்களில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை வியாபாரிகள் வந்து 1 கிலோவில் இருந்து 3 கிலோ வரை உள்ள கோழிகளை தோராய மதிப்பு போட்டு வாங்கி சென்று, அதனை மொத்தமாக சணல் சாக்கில் கட்டி பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் கோழி வளர்ப்போர் இருந்த இடத்திலேயே அதிக லாபத்தை சம்பாதிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புறங்களில் வாங்கப்படும் நாட்டுக்கோழிகள் கரூர், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பெரிய சாக்கில் கட்டி பேருந்து மூலமாக அந்த பகுதிக்கு கொண்டு சென்று லாபகரமான விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து நாட்டுகோழி வியாபாரிகள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நாட்டு கோழி வளர்ப்பு அதிகம். இதனால் இங்கு கோழிகள் அதிகளவில் கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி நாங்கள் குக்கிராமங்களுக்கு சென்று வீட்டில் உள்ள கோழிகளை ஒவ்வொன்றாக வாங்கி ஒருவாரகாலத்திற்குள் நூறுக்காணக்கான கோழிகளை வாங்கி அதற்கான தீவனங்களை வைத்துவிடுவோம். பின்னர் மொத்தமாக நான்கு ஐந்து வியாபாரிகள் ஒன்று சேர்ந்து பேருந்து மூலமாகவோ அல்லது தனியாக வேன் எடுத்துக்கொண்டோ கரூர், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் அதிக வீடுகளில் நாட்டுகோழி வளர்க்கின்றனர்.

அவர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி சென்று, நாட்டுக்கோழி கடை என தனியாக வைத்து விற்பனை செய்கிறோம். மேலும், கோழிகளை நன்கு சுத்தம் செய்து மொத்தமாக வண்டிகளில் கொண்டு சென்று சாலையோரங்களில் வைத்தும் விற்பனை செய்கிறோம்.
குறிப்பிட்ட தொகை லாபம் வைத்து விற்பனை செய்கிறோம். தற்போது நாட்டு கோழி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால் எங்களுக்கு நல்ல முறையில் லாபம் கிடைத்து வருகிறது. இதனால் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

கிராமங்களில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை வியாபாரிகள் வந்து 1 கிலோவில் இருந்து 3 கிலோ வரை உள்ள கோழிகளை தோராய மதிப்பு போட்டு வாங்கி சென்று, அதனை மொத்தமாக சணல் சாக்கில் கட்டி பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். புதுமண தம்பதிகளுக்கு இதனை அதிகம் சமைத்து கொடுப்பார்கள். மேலும், நாட்டுக்கோழி முட்டையை குழந்தைகளுக்கு கொடுத்தால் உடலுக்கு அதிக ஆரோக்கியம். இதுமட்டுமின்றி புதிதாக பூப்பெய்த பெண்களுக்கு நாட்டுக்கோழி முட்டையைதான் அதிகம் கொடுப்பார்கள். இதனால் சந்தையில் இதன் மதிப்பே தனிதான்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »