Press "Enter" to skip to content

தர்பார் படம் நஷ்டமா.. ரஜினியை சந்திக்க குவிந்த விநியோகஸ்தர்கள்.. காவல் துறை தடுத்ததால் பரபரப்பு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படத்தால் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர் விநியோகஸ்தர்கள். இது தொடர்பாக ரஜினிகாந்தை சந்தித்து முறையிட சென்ற விநியோகஸ்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் ஜனவரி 9-ல் வெளியானது. தொடக்கத்தில் தர்பார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியதாகவும் ரூ150 கோடி வசூலித்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் தர்பார் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை; இதனால் தங்களுக்கு 40% நஷ்டம் என்பது விநியோகஸ்தர்களின் புகார். இது தொடர்பாக தர்பார் தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் விநியோகஸ்தர்கள் முதலில் முறையிட்டனர்.

இதில் தாங்கள் தலையிட முடியாது என்றும் முருகதாஸ், ரஜினிகாந்த் ஆகியோரை சந்திக்குமாறும் லைகா நிறுவனம் கை விரித்து விட்டதாம். இதனால் முருகதாஸை விநியோகஸ்தர்கள் சந்திக்க முயன்றனர். அந்த முயற்சி பலன் தரவில்லை.

இதனையடுத்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு இன்று விநியோகஸ்தர்கள் குழுவாக சென்றனர். ஆனால் ரஜினிகாந்த் வீட்டில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் இதற்கு அனுமதி மறுத்தனர்.

துக்ளக் விழாவில், தந்தை பெரியாரை ரஜினிகாந்த் அவதுறாக பேசிய விவகாரத்தில் அவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதனை காரணம் காட்டி ரஜினிகாந்தை சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை.

இதனால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களில் ஒருதரப்பு மீண்டும் முருகதாஸ் அலுவலகத்துக்கும் மற்றொரு தரப்பு ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்துக்கும் சென்றுள்ளனர். இதனிடையே தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, தர்பார் திரைப்படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு அரசு உதவும் என அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த படத்தில் தயாரிப்பு தரப்பும் ஒதுங்கிக் கொண்டது; பாதுகாப்பு காரணங்களுக்காக ரஜினிகாந்தையும் சந்திக்க முடியவில்லை. இதனால் விழிபிதுங்கி நிற்கும் தங்களுக்கு அமைச்சரின் இந்த அறிவிப்பு புரியாத புதிராக இருக்கிறது என்கின்றனர் விநியோகஸ்தர்கள். தர்பார் விவகாரம் பெரிதாக வெடிக்கப் போவதாக திரையுலகிலேயே பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »