Press "Enter" to skip to content

அருப்புக்கோட்டையில் பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடக்கும் பூங்காக்கள்: பாம்புகள் ‘விசிட்’: பொதுமக்கள் அச்சம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட பூங்காக்கள் பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடப்பதால் பாம்புகள் படையெடுக்க தொடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அருப்புக்கோட்டையில் அஜீஸ் நகர், வசந்தம் நகர், ரயில்வே பீடர் ரோடு, எம்டிஆர் நகர், கணேஷ் நகரில் நகராட்சி மூலம் பொதுமக்களின் பொழுது போக்கிற்காக தலா ரூ.20 லட்சத்தில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இதில், அஜீஸ்நகர் பூங்கா மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இப்பூங்காவிற்கு அஜீஸ்நகர், டிஆர்வி நகர், ரயில்வே பீடர் ரோடு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சிக்காக காலை, மாலை வேளைகளில் வந்து செல்கின்றனர்.

பராமரிப்பு இல்லாத பூங்கா: இந்நிலையில், அஜீஸ்நகர் பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டிக் கிடக்கிறது. இரவு நேரங்களில் விளக்குகள் எரிவதில்லை. நடைபயிற்சி மேற்கொள்ளும்போது பாம்புகள் வருவதாக அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால், மாலை வேளைகளில் பூங்காவிற்கு வர பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இருக்கைகளும் சேதமடைந்துள்ளன. இப்பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல, சொக்கலிங்கபுரம் எம்டிஆர் நகர் பகுதி, கணேஷ் நகர் பகுதிகளில் அமைக்கப்பட்ட பூங்காக்களில் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் அமைக்கப்படவில்லை.

அழகிய வண்ணச் செடிகள், செயற்கை புல்தரைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் இல்லாமல் கருகின்றன. ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள லட்சுமி தியேட்டர் பூங்கா, வசந்தம் நகர் பூங்கா, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. நகரில் அமைக்கப்பட்ட அனைத்து பூங்காக்களும் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. ஓராண்டுக்கு முன் அமைக்கப்பட்ட ரயில்வே பீடர் ரோடு பூங்கா, கணேஷ் நகர், எம்டிஆர் நகர் பூங்காக்கள் பயன்பாடு இல்லாமல் புதர்மண்டிக் கிடக்கிறது. எனவே, பூங்காக்களை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »