Press "Enter" to skip to content

ரஜினிக்கு எதிராக ஏன் போர்க்கொடி… விநியோகஸ்தர்களுக்கு உண்மையிலேயே பாதிப்பா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான தர்பார் திரைப்படத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறி போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் விநியோகஸ்தர்கள்.

குறிப்பாக செங்கல்பட்டு உள்ளிட்ட எட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கே இரண்டு முறை சென்றுவிட்டனர். ஆனால் அந்த இரண்டு முறையும் அவர்களால் ரஜினியை பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ரஜினிகாந்துக்கு எதிராக சிலர் தூண்டுதல் செய்வதாக ஒரு தரப்பு கூற ஆரம்பித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் திரைப்படம் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியான முதல் நான்கு நாட்களில் மட்டும் ரூ.150 கோடி வசூல் வந்ததாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உண்மை அதுவல்ல என்றும், தர்பார் படத்தால் தங்கள் கைக்காசை இழந்து நிற்பதாகவும் கூறுகின்றனர் விநியோகஸ்தர்கள்.

தர்பார் படம் வசூல் மற்றும் லாபம் பற்றி இப்படி இரண்டு தரப்பும் மாறி மாறி தெரிவித்து வரும் சூழலில், எது உண்மை என்பது பற்றி எந்த விவரமும் வெளியாகவில்லை. (உண்மையை கடைசி வரைக்கும் யாரும் சொல்லவும் மாட்டார்கள் என்பது அடுத்த கதை). ஆனால் ரஜினிக்கு எதிராக சிலர் தூண்டுதலில் ஈடுபடுவது மட்டும் கண்கூடாக தெரிகிறது என்கிறது அவரது வட்டாரம். ரஜினிக்கு எதிராக சிலர் விரித்துள்ள மாய வலையில் அப்பாவிகளான விநியோகஸ்தர்கள் சிக்கிக்கொண்டால், அவர்கள் தொழில் தான் பாதிப்படையும் என்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

imageRajinikanth: ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள அனுமதிக்க முடியாது.. பாரதிராஜா ஆவேசம்

இது தொடர்பாக ரஜினியின் தீவிர ஆதரவாளரும், இளம் தொழிலதிபருமான ஒருவரிடம் கேட்ட போது, ”ரஜினி அரசியலுக்கு வருவதை பிடிக்காத சிலர், இப்படி திரைமறைவு வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், அவர்கள் யார் என்பது பற்றி தலைவர் நன்கறிவார்” எனவும் கூறினார். மேலும், இந்தப் பிரச்சனையில் விநியோகஸ்தர்கள் பொறுமை காத்து உண்மை நிலையை சிந்தித்து செயல்பட வேண்டும் என அவர் கோரினார்.

இதனிடையே, தர்பார் பட நஷ்டம் தொடர்பாக ரஜினிகாந்த் தங்களை சந்தித்து பேசாதவரை இந்த விவகாரத்தை கைவிடமாட்டோம் என உறுதியாக நிற்கிறது விநியோகஸ்தர்கள் தரப்பு.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »