Press "Enter" to skip to content

மருத்துவக்கல்லூரிக்கு கையகப்படுத்திய இடத்தில் பழைய குடியிருப்புகளை அகற்றும் பணி மும்முரம்

விருதுநகர்: விருதுநகர் உட்பட 6 மருத்துவகல்லூரிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மருத்துவ கல்லூரிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 22.4 ஏக்கர் நிலமும், அரசு தலைமை மருத்துவமனையில் 4 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் 22.4 ஏக்கரில் மருத்துவக்கல்லூரி மெயின் பில்டிங், வகுப்பறை, மாணவ, மாணவியர் விடுதிகள், கல்லூரி பேராசிரியர்கள் குடியிருப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது. தலைமை மருத்துவமனையில் 11.40 ஏக்கரும், மகப்பேறு மருத்துவமனையில் 3.60 ஏக்கர் நிலம் என 15 ஏக்கர் நிலம் உள்ளது.

இங்குள்ள அவசர சிகிச்சை மையம் எதிரில் உள்ள காலி நிலம், கண் மருத்துவமனை, பிணவறை, பணியாளர்கள் குடியிருப்புகள் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு 4 ஏக்கர் நிலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்காக எடுக்கப்படும். அதில் ஆர்.எம்.ஓ குடியிருப்பு, நர்சிங் குடியிருப்புகள், 80 மீ நீளம், 80 மீ அகலத்தில் பிரமாண்டமான 7 மாடி மருத்துவமனை உள்ளிட்டவை ரூ.380 கோடியில் கட்டப்பட உள்ளன. இந்நிலையில், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நான்குவழிச்சாலை அருகில் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்த வீட்டுவசதி வாரிய பாழடைந்த 400க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியில் ஜேசிபி உள்ளிட்ட 6 இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளன.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »