Press "Enter" to skip to content

தர்பார் விநியோகிஸ்தர்களுக்கு அரசு உதவும்: அமைச்சர் …3 நிமிட வாசிப்புதர்பார் திரைப்படம் தொடர்பாக விநியோகிஸ்தர்கள் அரசை அணுகினால் உதவி செய்யப்படும் என…

தர்பார் திரைப்படம் தொடர்பாக விநியோகிஸ்தர்கள் அரசை அணுகினால் உதவி செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி தர்பார் திரைப்படம் வெளியானது. திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தால் நஷ்டமடைந்ததாக விநியோகிஸ்தர்கள் புகார் கூறினர். இதுதொடர்பாக ஜனவரி 30ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து முறையிட முயன்றனர். எனினும் அவர்களால் ரஜினியை சந்திக்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 3) சென்னை போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு விநியோகிஸ்தர்கள் சென்றனர். ஆனால், அவர்களை உள்ளே நுழைய விடாமல் அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் திரையரங்குகளில் அரசே ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் இன்று நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம், தர்பார் பட நஷ்டம் தொடர்பாக விநியோகிஸ்தர்கள் யாரும் உங்களை அணுகியிருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “தர்பார் பட வெளியீட்டின்போது லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு வந்தார்கள். அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தர்பார் நஷ்டம் தொடர்பாக விநியோகிஸ்தர்களோ, தயாரிப்பாளரோ யாரும் அரசை அணுகவில்லை. இந்த செய்திகளை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். அதுபோல, தங்களுக்கு நல்ல வசூல் ஆகியிருக்கிறது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிப்பதையும் பார்க்கிறேன்.

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி நிர்வாகி நியமிக்கப்பட்டிருக்கிறார். முறைப்படி விநியோகிஸ்தர்கள் தயாரிப்பாளர் சங்கத்துக்குச் சென்றால் அவர்களுக்கு நாங்கள் வழிகாட்டுவோம். அங்கு சென்று தீர்வுகாணக் கூடிய நிலையை அரசு ஏற்படுத்தும். அவர்களுக்கு உதவும்” என்று தெரிவித்தார்.

இதனால் தர்பார் திரைப்பட விநியோகிஸ்தர்கள் அமைச்சரை சந்தித்து உதவி கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »