Press "Enter" to skip to content

ராகுல் டிராவிட் அனுப்பிவைத்த காணொளி.. உத்வேகத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய அண்டர் 19 இந்திய வீரர்கள்

தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் அண்டர் 19 உலக கோப்பையில், லீக் சுற்றில் இலங்கை, நியூசிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை அசால்ட்டாக வீழ்த்தி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 173 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணியின் தொடக்க வீரர்களே அடித்துவிட்டனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். சக்ஸேனா அரைசதம் அடித்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார்.

இந்த வெற்றியையடுத்து, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது அண்டர் 19 இந்திய அணி. 2016 அண்டர் 19 உலக கோப்பையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இறுதி போட்டிவரை சென்ற இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸிடம் தோற்று கோப்பையை இழந்தது. அதன்பின்னர் 2018 உலக கோப்பையிலும் ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் மீண்டும் இறுதி போட்டிக்கு சென்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. 

இதையடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக இம்முறையும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. அண்டர் 19 அணியின் அதீத வளர்ச்சிக்கு, முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கியமான காரணமாக திகழ்ந்தவர். அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக இருந்து மிகச்சிறந்த, இளம் வயதிலேயே முதிர்ச்சியடைந்த, ஒழுக்கமான வீரர்களை உருவாக்கி கொடுத்து கொண்டிருந்தார் ராகுல் டிராவிட். இந்நிலையில், அண்டர் 19 அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு என்சிஏ-வின் தலைவராக நியமிக்கப்பட்டதால், அந்த பொறுப்பையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார் ராகுல் டிராவிட். 

இந்நிலையில், ராகுல் டிராவிட் அண்டர் 19 பயிற்சியாளராக இல்லையென்றாலும், அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் பணியை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆடும் முன்பாக ராகுல் டிராவிட், இளம் வீரர்களை உற்சாகப்படுத்த பேசிய வீடியோ, அவர்களுக்கு போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் ராகுல் டிராவிட் பேசியதை அப்படியே மனதில் ஏற்றிக்கொண்டு களத்திற்கு சென்றுள்ளனர் இந்திய இளம் வீரர்கள்.

ராகுல் டிராவிட் வீடியோவில் பேசியது குறித்து, அரையிறுதியில் சதமடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேசியுள்ளார். அதுகுறித்து பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் டிராவிட் சார் பேசி அனுப்பியிருந்த வீடியோவை நாங்கள் பார்த்தோம். டிராவிட் சார் எங்களை உற்சாகமும் உத்வேகமும் படுத்தும் விதமாக அந்த வீடியோவில் பேசியிருந்தார். அவரது வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தன. கிரிக்கெட் என்பது 22 யார்டுக்குள் ஆடுகிற ஆட்டம். எனவே இந்த போட்டியும் மற்ற போட்டிகளை போலத்தான் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, முழு கவனத்துடன் ஆடுங்கள் என்று டிராவிட் சார் அறிவுறுத்தியிருந்தார் என யஷஸ்வி தெரிவித்தார். 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »