Press "Enter" to skip to content

அரசு ஊழியர்கள் 6 பேர் பணியிடைநீக்கம்..! தொடரும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வேட்டை..!

அண்மையில் வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தன. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் சிலர் இடைத்தரகர்கள் உதவியுடன் மறையக்கூடிய மையினால் தேர்வு எழுதியது விசாரணையில் தெரிய வந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட 39 தேர்வாளர்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

இதையடுத்து 99 தேர்வாளர்களை தகுதி நீக்கம் செய்த தேர்வாணையம் அவர்களை வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தேர்வாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி இடைத்தரகர் ஜெயக்குமார் இன்று காலையில் சரணடைந்துள்ளார். சிபிசிஐடி போலீசார் அவரை பலநாட்களாக தேடி வந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் சரணடைந்திருக்கிறார்.

இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு பணியில் சேர்ந்ததாக பத்திரப்பதிவு துறையைச் சேர்ந்த 6 ஊழியர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் ஜெயராணி, வேல்முருகன், சுதா, ஞான சம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகிய ஆறுபேரையும் பணியிடை நீக்கம் செய்து பதிவுத்துறை ஐ.ஜி ஜோதி நிர்மலா நடவடிக்கை எடுத்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஏற்கனவே காவலர்கள் சித்தாண்டி, பூபதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பயபக்தியுடன் பெருவுடையாரை தரிசித்த சீமான்..! தம்பிகளுடன் குடமுழுக்கில் தாறுமாறு கொண்டாட்டம்..!

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »