Press "Enter" to skip to content

அண்டர் 19 உலக கோப்பை.. வரலாறு படைத்த வங்கதேசம்.. கடுமையாக போராடி தோற்ற இந்தியா

அண்டர் 19 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இந்திய அணியும் வங்கதேச அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சக்ஸேனாவும் இறங்கினர். இருவரும் மெதுவாக ஆரம்பித்தனர். போகப்போக வேகமெடுப்பார்கள் என்று பார்த்தால், கடைசி வரை வேகமெடுக்காமலேயே சக்ஸேனா ஆட்டமிழந்தார். 

17 பந்தில் வெறும் 2 ரன் மட்டுமே அடித்து சக்ஸேனா ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த திலக் வர்மா, ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். அடித்து ஆடி விரைவில் ரன்களை குவிக்கவில்லையே தவிர, இருவரும் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த திலக் வர்மா 38 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கேப்டன் பிரியம் கர்க் 7 ரன்களில் நடையை கட்ட, அணியின் ஸ்கோர் குறைவாக இருந்தது. எனவே களத்தில் நிலைத்து அரைசதம் அடித்திருந்த ஜெய்ஸ்வால், அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

அரையிறுதி போட்டியில் சதமடித்த ஜெய்ஸ்வால், இந்த போட்டியிலும் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். ஆனால் அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், பந்தை தூக்கியடிக்க முயன்று 88 ரன்களில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 156 ரன்களாக இருந்தபோது ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்தது. 22 ரன்கள் அடித்திருந்த த்ருவ் ஜுரேல் ரன் அவுட்டானார். அதன்பின்னர் யாருமே இரட்டை இலக்க ரன்னே அடிக்கவில்லை. அனைவருமே ஒற்றை இலக்கத்திலும் டக் அவுட்டும் ஆகி வெளியேற, ஜெய்ஸ்வால் அவுட்டான, அடுத்த 21 ரன்களில் இந்திய அணி எஞ்சிய 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

178 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள், இறுதி போட்டியில் இலக்கை விரட்டுகிறோம் என்ற பதற்றமோ பயமோ இல்லாமல் துணிச்சலாக தொடக்கம் முதலே அடித்து ஆடினர். முதல் விக்கெட்டுக்கு தொடக்க வீரர்கள் 50 ரன்கள் சேர்த்தனர். இலக்கே 178 ரன்கள் தான். அதில் ஓபனிங் பார்ட்னர்ஷிப்பே 50 ரன்கள். தன்சித் ஹசன் 17 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த எமோன் காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். 

முதல் விக்கெட்டை இன்னிங்ஸின் 9வது ஓவரில் ரவி பிஷ்னோய் வீழ்த்தினார். அதன்பின்னர் 13வது ஓவரில் மஹ்மதுல் ஹசன் ராய், 15வது ஓவரில் ஹ்ரிடாய், 17வது ஓவரில் ஷஹாதத் ஹுசைன் என தனது அடுத்தடுத்த ஓவர்களில் ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் ரவி பிஷ்னோய். ஷமீம் ஹுசைன் அவிஷேக் தாஸ் ஆகிய இருவரையும் சுஷந்த் மிஷ்ரா வீழ்த்தினார். இதையடுத்து வங்கதேச அணி 102 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

ஐந்தாம் வரிசையில் களத்திற்கு வந்த கேப்டன் அக்பர் அலி, பொறுப்புடன் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் ஷமீம், அவிஷேக் ஆகியோர் ஆட்டமிழந்தாலும், நெருக்கடியான சூழலிலும் கூட அவசரமோ பதற்றமோ படாமல் நிதானத்தை கையாண்டார். ஆறு விக்கெட்டுக்கு பின்னர், ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிச்சென்ற எமோன், அக்பருடன் ஜோடி சேர்ந்தார். 

இவர்கள் இருவரும் அருமையாக ஆடி ஸ்கோரை மெது மெதுவாக உயர்த்தினர். இந்திய பவுலர்கள் இந்த ஜோடியை பிரிக்க கஷ்டப்பட்டனர். எமோனை 47 ரன்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வீழ்த்தினார். ஆனாலும் அக்பர் கடைசி வரை களத்தில் நின்று வங்கதேச அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதையடுத்து இந்திய அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக அண்டர் 19 உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது வங்கதேசம். 

இறுதி போட்டியின் ஆட்டநாயகனாக வங்கதேச கேப்டன் அக்பர் அலியும், தொடர் நாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தேர்வு செய்யப்பட்டனர். 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »