Press "Enter" to skip to content

தென்னாப்பிரிக்காவை பழிதீர்த்த இங்கிலாந்து.. அடில் ரஷீத் ஆட்டநாயகன்

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-1 என வென்று அசத்தியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்தது. 

இந்த தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இதையடுத்து மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. 

ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவரில் 256 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியின் ரீஸா ஹென்ரிக்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான குயிண்டன் டி காக்குடன் டெம்பா பவுமா ஜோடி சேர்ந்தார். 

பவுமாவும் சரியாக ஆடவில்லை. 25 ரன்களில் பவுமா வெளியேற, அவரை தொடர்ந்து வாண்டர் டசன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்த குயிண்டன் டி காக்கை 69 ரன்களில் வீழ்த்தினார் அடில் ரஷீத்.

அதன்பின்னர் ஜேஜே ஸ்மட்ஸ் 31 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி 35 ஓவரில் 155 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் களத்திற்கு வந்த டேவிட் மில்லர், அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்து ஃபெலுக்வாயோ ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். ஃபெலுக்வாயோ14 ரன்களிலும் பியூரன் ஹென்ரிக்ஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனாலும் மறுமுனையில் நின்று அடித்து ஆடிய மில்லர் அரைசதம் கடந்தார். 

53 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 69 ரன்களை விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் மில்லர். மில்லரின் அதிரடியால் 50 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 256 ரன்கள் அடித்தது. 

257 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், பேர்ஸ்டோ அடுத்ததாக ரூட் ஆகிய மூவரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்தனர். ராய் 21 ரன்கள் அடித்தார். பேர்ஸ்டோ 43 ரன்களும் ரூட் 49 ரன்களும் அடித்தனர். கேப்டன் மோர்கன் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தார். ஆனால் ஜோ டென்லி பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரது பொறுப்பான ஆட்டம், இங்கிலாந்து அணியை கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் கொண்டு சென்று விட்டதால், அவர் அவுட்டான பிறகும் கூட, இங்கிலாந்து அணிக்கு வெற்றி எளிதானது. 48வது ஓவரிலேயே இலக்கை எட்டி இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆட்டநாயகனாக இங்கிலாந்து ஸ்பின்னர் அடில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டார். குயிண்டன் டி காக், டெம்பா பவுமா ஆகிய முக்கிய வீரர்கள் மற்றும் தேவையான நேரத்தில் ஃபெலுக்வாயோ ஆகிய மூவரையும் வீழ்த்திய அடில் ரஷீத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக தென்னாப்பிரிக்க கேப்டன் குயிண்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டார். 

முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டி ரத்தானது. எனவே இந்த போட்டியில் இங்கிலாந்து வென்றதன் மூலம் தொடர் 1-1 என சமனானது. 
 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »