Press "Enter" to skip to content

40 வீரர்கள் பலியானதன் ஓராண்டு நிறைவு – புல்வாமாவில் நினைவுச்சின்னம் திறப்பு

புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் நேற்று அங்கு நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது.

லேத்போரா:

துணை ராணுவ படைகளில் ஒன்றான மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்களின் 78 வாகனங்களும் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

இந்த வாகன அணிவகுப்பு புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட அவந்திப்போரா அருகே லேத்போரா என்ற பகுதியில் சென்றபோது திடீரென ஜீப் ஒன்றில் வெடிகுண்டுகளுடன் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் சி.ஆர்.பி.எப். வீரர்களின் வாகனம் மீது பயங்கரமாக மோதி வெடிக்கச்செய்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் உடல் சிதறி பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் அடங்குவர். உலகையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அதீல் அகமது தார் சம்பவத்தின்போதே உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்த அனைவரையும் பாதுகாப்பு படையினர் அடுத்தடுத்த நிகழ்வுகளின்போது சுட்டுக்கொன்றனர். இதில் தொடர்புடைய கடைசி நபரும், ஜெய்ஷ்-இ-முகமது தளபதியுமான குவாரி யாசிர் கடந்த மாதம் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார்.

ஒட்டுமொத்த தேசத்தையும் கண்ணீரில் ஆழ்த்திய இந்த சம்பவத்தின் முதலாண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு இந்த சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக, லேத்போராவில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாமில் நினைவுச்சின்னம் ஒன்று எழுப்பப்பட்டு உள்ளது. அதில், உயிரிழந்த 40 வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டு உள்ளன.

இந்த நினைவுச்சின்னம் நேற்று திறக்கப்பட்டது. உணர்ச்சிகரமாக நடந்தேறிய இந்த நிகழ்ச்சியில் சி.ஆர்.பி.எப். கூடுதல் இயக்குனர் ஜெனரல் ஜுல்பிகர் ஹசன் உள்பட உயர் அதிகாரிகள் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மராட்டியத்தை சேர்ந்த உமேஷ் கோபிநாத் என்பவர் சுமார் 61,000 கி.மீ. பயணம் செய்து இந்த தாக்குதலில் பலியானவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்கள் வீட்டிலிருந்து மண்ணை சேகரித்து வந்திருந்தார். இந்த மண் அடங்கிய கலசத்தை நேற்று அவர் சி.ஆர்.பி.எப். அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் மாநில போலீசார் என ஏராளமான பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »