Press "Enter" to skip to content

பிப்.14 இரவு கருப்பு இரவு- மு.க.ஸ்டாலின்

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னை வண்ணாரபேட்டையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்தியதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இந்த சம்பவத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினரின் தலைவர்களுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பிப்ரவரி 14-ந்தேதி இரவை கருப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன் அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும். அமைதியான போராட்டத்தை வன்முறை போராட்டமாக சித்தரிக்க காவல்துறை திட்டமிட்டு செயல்பட்டுள்ளது.

ஜனநாயக போராட்டங்களை ஏற்று அங்கீகரிக்கும் பழக்கத்தை அரசு கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »